உங்களை நெகிழ வைத்த மருத்துவர்கள் பற்றி 'மை விகடன்' பக்கத்தில் எழுதுங்கள்!
கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை காவல்துறையினருக்கும், அன்னூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போலீஸார் முன்னிலையில் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கிப் பார்த்தபோது, சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து அந்த சாக்குபையை கயிறு கட்டி வெளியே எடுத்து வந்தபோது, அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று உடலில் காயங்களுடன் கை, கால் கட்டப்பட்ட நிலையிலும், அந்தச் சடலத்துடன் கல் ஒன்றை கட்டி வீசி இருந்ததும் தெரியவந்தது. பின்னர் சடலத்தை மீட்ட சிறுமுகை காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, கிணற்றுக்குள் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலைசெய்யப்பட்ட பெண் யார்... அவரை கொலைசெய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















