அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப்...
கோவை: 24 மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல்; கல்லூரி மாணவர் கைதான பின்னணி என்ன?
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாக காவல்துறைக்குப் புகார் வந்தது.

மொத்தம் 24 மாணவிகளிடமிருந்து புகார் வந்ததால், பெண் காவல் அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தக் கல்லூரியில் படிக்கும் 24 மாணவிகளின் புகைப்படங்களை, ஏஐ தொழில்நுட்பத்தில் அரை குறை ஆடைகளுடன் சித்தரித்துள்ளனர். பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் பெயர்களில் போலியான கணக்குகளை உருவாக்கி அதில் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

மேலும் கல்லூரியின் சில வாட்ஸ்அப் குழுக்களிலும் அந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களை நீக்க இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
காவல்துறை விசாரணையில் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் திருச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்தது தெரியவந்தது. அந்த மாணவனுக்கு அதே கல்லூரியில் காதலி ஒருவர் உள்ளார். அவர் மூலம் மற்ற மாணவிகளின் புகைப்படங்களைப் பெற்றுத் தவறாகச் சித்தரித்து, மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரைக் கைது செய்தனர். மேலும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன.



















