`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பி...
சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம் மற்றும் கருவறை திருக்கதவுகள் ஆகியவற்றில் தங்கம் பதித்ததில் நடந்த மோசடி குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது.
சபரிமலை கருவறை மற்றும் அதன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கத்தை தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு காணிக்கையாக வழங்கியிருந்தார்.
துவாரபாலகர்கள் சிற்பத்தில் தங்கம் நிறம் மங்கியதாகக் கூறி, மீண்டும் தங்கம் பூசுவதற்காக உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னைக்கு எடுத்துச் சென்றார். அப்போது தங்கம் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கடந்த ஆண்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர்கள், கமிஷனர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம், இந்த வழக்கில் அதிநவீன அறிவியல் பரிசோதனை அவசியம் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய சிற்பங்களில் இருந்து எடுக்கப்பட்ட 8 மாதிரிகள் ஜம்ஷத்பூர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
அங்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட்ட பரிசோதனையில் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. விஜய் மல்லையா தடிமனாக தங்கம் பூசியிருந்த நிலையில், அயோடைடு செயல்முறை மூலம் ரசாயன ரீதியாக தங்கத்தைப் பிரித்துத் திருடியுள்ளனர்.
தங்கத்தை கொள்ளையடித்த பிறகு, திருட்டு வெளியே தெரியாமல் இருக்க, மிக மெல்லிய அளவில் நேர்த்தியான முறையில் மீண்டும் தங்கம் பூசி திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைத்துள்ளனர்.

துவாரபாலகர்கள் சிற்பத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகி உள்ளது. அதே சமயம் பி.எஸ்.பிரசாந்த் தலைவராக இருந்த தேவசம் போர்டு கமிட்டியின் காலத்தில், பராமரிப்புப் பணிகளுக்காகச் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட தங்கம் பொதியப்பட்ட கதவுகளில் இருந்து தங்கம் திருடப்படவில்லை என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவியல்பூர்வமான அறிக்கை, சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஜம்ஷத்பூரில் உள்ள புகழ்பெற்ற தேசிய உலோகவியல் ஆய்வகம் நடத்திய சோதனையின் முடிவுகள், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆய்வக முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு திருடப்பட்ட தங்கத்தின் துல்லியமான அளவு எவ்வளவு என்பதைக் கணக்கிடும் பணியில் புலனாய்வுக் குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்த அளவு தெரிந்தவுடன் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.பிரசாந்தின் காலத்தில் தங்கம் திருடப்படவில்லை என்று கூறப்பட்டாலும், முழுமையான உண்மைத்தன்மையை அறிய மீதமுள்ள அனைத்து தங்க கவசங்களையும் பரிசோதிக்கப் புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளது.
இதற்காக, மேலும் சில மாதிரிகளைச் சேகரிக்க உயர் நீதிமன்றத்தின் அனுமதியை நாடப் போவதாகப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
















