`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை' - 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும்...
"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரின் விளக்கம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள்ளிப்படிப்பினை முடித்த அபிசெல்வி கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவரவே அண்ணன் சிவஞானம் கண்டித்து வந்துள்ளார். ஆனாலும், அபிசெல்வி வீட்டிற்குத் தெரியாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி அபிசெல்வி பூச்சிமருந்து குடித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அந்தப் பெண்ணை காதல் விவகாரத்தில் அண்ணன் கொலை செய்ததும் அதற்கு தாயும் உடன் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து கயத்தார் காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், ”தங்கையிடம் எவ்வளவோ சொன்னேன். கேட்கல, தொடர்ந்து அந்த பையனிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரமாக மாப்பிளை பார்த்துக் கொண்டிருந்தோம்.
”கல்யாணம் செஞ்சா அவனைத்தான் பண்ணுவேன்” என விடாப்படியாக இருந்தாள். 9-ம் தேதி இரவும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக சொல்லிப் பார்த்தேன். அப்போதும் கேட்கல. ஆத்திரத்துல கட்டையால அடிச்சுட்டேன். தங்கையின் இறப்பை மறைக்க தற்கொலை செஞ்சுக்கொட்டதா நானும் அம்மாவும் சொன்னோம்" என விசாரணையில் சிவஞானம் கூறினார்.

ஆனால், விசாரணையின் போது அந்த பெண்ணின் அண்ணன், அம்மா இருவருமே பதட்டமாகவேக் காணப்பட்டனர். அவர்களின் பேச்சிலும் பதட்டம் தென்பட்டது. அப்போதே எங்களுக்கு சின்ன சந்தேகம் ஏற்பட்டது. பிரேதப் பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையில் பின்கழுத்து, மூக்கு பகுதில் மரக்கட்டையால் ஓங்கி அடித்ததற்கான காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் தனித்தனியாக விசாரித்ததில் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.” என்றனர்.
இதுகுறித்து கோவில்பட்டி டி.எஸ்.பி., ஜெகநாதனிடம் பேசினோம், ”அபிச்செல்வியின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனை எழுந்துள்ளது. காதலை கைவிட மறுத்து அபி செல்வி ஏற்கெனவே ஒருமுறை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த பிரச்னைக்கு பிறகு ஹரி பிரசாத் அபி செல்வியுடன் பழகுவதை நிறுத்திக் கொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிபிரசாத் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அபி செல்வி மெசேஜ் அனுப்பி உள்ளார்.

ஆனால், ஹரி பிரசாத் அதை எதையும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் அபி செல்வியின் செல்போன் பழுதாகிவிட அதை சரிபார்க்க தனது சகோதரர் சிவஞானத்திடம் அவர் கொடுத்துள்ளார். அப்போது ஹரி பிரசாத்திற்கு அபி செல்வி மெசேஜ் அனுப்பி இருப்பதை பார்த்து மீண்டும் தங்கையை கண்டித்துள்ளார். அதில் ஏற்பட்ட தகராறால் அபிசெல்வி கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஆணவக்கொலை அல்ல. ஆணவக்கொலை என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என்றார்.
”கடந்த 2017 முதல் 2025 வரை தமிழகத்தில் 59 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சுபாஷ் (16.04.2026), தூத்துக்குடி மாவட்டம், கரடிகுளத்தைச் சேர்ந்த சஞ்சய் (17.05.2026), நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி (09.06.2026) ஆகியோருடன் இந்த கயத்தார் அபிசெல்வி கொலையுடன் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் நான்கு ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.

தமிழ் நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில்தான் ஆணவப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. ஆணவப்படுகொலைக் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உடனடியாக தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் கொலை தீர்வாகுமா?” என கவலை தெரிவிக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

















