தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" - பிரேமலதா விஜயகா...
சர்ச்சை வீடியோ: ``அது மனிதர்களால் ஏற்பட்ட பிழை அல்ல; AI தொழில்நுட்பத்தால்..." - அமைச்சர் ராஜ் மோகன்
கோவையில் தமிழக அரசின் சார்பில் பிரமாண்ட அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்காட்சியின் தொடக்கவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இன்று முறைபடி பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, மக்கள் நலனை முன்னிறுத்தி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஆதிதிராவிட மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டைகள், ஈ-பட்டாக்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழக முதலமைச்சருக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகள்

கடந்த வாரம் 'சிங்கப்பெண்' திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட காணொலியில் ஆங்காங்கே தமிழ் எழுத்துப்பிழைகள் இருந்தன. இது அதிகாரிகளின் கவனக்குறைவோ அல்லது மனிதர்களால் ஏற்பட்ட பிழையோ கிடையாது. இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பிழை.
எனினும், இனிவரும் காலங்களில் காணொலிகள், ஆடியோக்கள் அல்லது வரைபடங்கள் என எந்தவொரு AI தொழில்நுட்பம் சார்ந்த அரசுப் பதிவுகள் வெளியாவதாக இருந்தாலும், அவை கட்டாயமாக தமிழ் வளர்ச்சித் துறையின் மறுஆய்வு மற்றும் ஆலோசனைக்குப் பிறகே வெளியிடப்பட வேண்டும்.
மன்னார்குடி மற்றும் உளுந்தூர்ப்பேட்டையில் கார் மோதி அரசுப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பள்ளி வளாகப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தேர்வுக் காலங்களில் மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க விமான நேரங்கள் கூட மாற்றியமைக்கப்படுகிறது. மாணவர்களின் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்பதால் பாதுகாப்புப் பணிகள் கூடுதல் கவனத்துடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மேலும், மலைவாழ் மக்களின் வசதிக்காகச் சிற்றுந்துகளும், சில இடங்களில் தோணிகள் மூலமும் மாணவர்கள் பள்ளிக்கு வர கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தரப்படும்.
பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பள்ளி மாணவர்களிடமும், இலவசப் பாஸ் வைத்துள்ள மூத்த தமிழ் அறிஞர்களிடமும் கூடுதல் கனிவோடு தங்களின் வீட்டுப் பிள்ளைகளைப் போல நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் அஸ்திவாரம் மிகவும் பலமானது. நேற்றைய பெருமைகளைப் பேசுவதோடு மட்டுமல்லாமல் நாளைய தொழில்நுட்பங்களையும் வருங்காலத் தலைமுறையினரையும் இணைப்பதே தற்போதைய அரசின் நோக்கம்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளும், முதலமைச்சருடன் கலந்தாலோசித்து மிக விரைவில் தகுதியானவர்களுக்கு ஆவணப் பூர்வமாக வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையில் மிகத் தீர்க்கமாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. மாதிரிப் பள்ளிப் போன்ற திட்டங்களைத் திணித்துதான் நிதி வழங்குவோம் என்பது முறையல்ல. மாநிலத்திற்குச் சேர வேண்டிய நிதி ஆதாரங்களைப் பெறத் தேவைப்பட்டால் டெல்லிக்குச் சென்று பேசவும் அரசு தயாராக இருக்கிறது" என்றார்.













