வடபழஞ்சி: `ஓர் உயிரிழப்புக்குப் பிறகும் தொடரும் பாதுகாப்பு குறைபாடு' - ரயில்வே க...
சாய்னா நேவால்: சைவ உணவிலிருந்து அசைவத்திற்கு மாற என்ன காரணம்? - மனம் திறந்த பேச்சு!
இந்தியாவிற்கு பேட்மின்டன் விளையாட்டில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்தவர் சாய்னா நேவால். 24 சர்வதேச பட்டங்களை வென்று உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த அவரது இந்த வெற்றிப் பயணத்தின் பின்னணியில் கடுமையான பயிற்சியும், அதைவிடக் கடுமையான உணவு கட்டுப்பாடும் இருந்துள்ளது. அடிப்படையில் சைவப் பிரியரான அவர், தனது விளையாட்டுக்காக எவ்வாறு அசைவ உணவுக்கு மாறினார் என்பது குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு சாமானியரின் உடலை விட, ஒரு சர்வதேச விளையாட்டு வீரரின் உடல் பலமடங்கு அதிக அழுத்தத்தையும் உழைப்பையும் சந்திக்கிறது. களத்தில் மணிக்கணக்கில் விளையாடும்போது ஏற்படும் தசைத் தேய்மானங்களைச் சரிசெய்யவும் காயங்களில் இருந்து மீளவும், உடலின் ஆற்றலைத் தக்கவைக்கவும் புரதச்சத்து மிகவும் அவசியம். புரதம் குறையும்போது தசை இழப்பு, அதிக சோர்வு, காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, ஒரு விளையாட்டு வீரரின் பார்வையில் புரதம் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல; அது கட்டாயத் தேவை.
சாய்னா நேவால் தனது கரியரின் தொடக்க காலத்தில் காய்கறிகள் மற்றும் பால் சார்ந்த உணவுகளையே அதிகம் உட்கொண்டுள்ளார். ஆனால், சர்வதேச போட்டிகளுக்காக சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்த போது அவருக்குச் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன.
வெளிநாடுகளில் எப்போதும் அவருக்குத் தேவையான தரமான சைவ உணவு கிடைக்கவில்லை. விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அதிகப்படியான புரதத்தை, எப்போதுமே 'புரோட்டீன் பவுடர்' மூலமாக மட்டுமே ஈடுகட்டி விளையாட முடியாது. இயற்கை உணவுகளிலிருந்தே முழுமையான புரதம் கிடைக்க வேண்டும்.

எனவே, தனது உடலின் தேவையைப் புரிந்து கொண்டு, தசைகளின் வலிமைக்காகவும், சீரான தூக்கத்திற்காகவும் அவர் சிக்கன் கறி, முட்டையைத் தனது உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினார்.
வயது அதிகரிக்க அதிகரிக்க, விளையாட்டு வீரர்களின் உடல் எடை கூடும் வாய்ப்பு அதிகம். எடைகூடினால் களத்தில் வேகமாகச் செயல்பட முடியாது. எனவே அதிக கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்து, தேவையான அளவு மட்டுமே உணவு உட்கொள்ளும் 'போர்ஷன் கண்ட்ரோல்' முறையை அவர் பின்பற்றியுள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தனக்குப் பிடித்தமான சோலே பட்டூரே, சமோசா, இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அசைவ உணவு குறித்து பல்வேறு அரசியல், சமூக ரீதியான சர்ச்சைகள் நிலவி வரும் இந்தக் காலகட்டத்தில், ஒரு சர்வதேச விளையாட்டு வீராங்கனை தனது உடலுக்கும், தனது துறைக்கும் எது தேவையோ அதை வெளிப்படையாகப் பேசியிருப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. உணவை ஒரு சர்ச்சைப் பொருளாகப் பார்க்காமல், அதை உடலுக்கான 'எரிபொருளாகப்' பார்க்கும் அவரது இந்த யதார்த்தமான அணுகுமுறை பலருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.















