முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
சாலையில் கிடந்த ‘ஏகே-47’ ரக துப்பாக்கி தோட்டாக்கள்: மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைப்பு
சென்னை அருகே மணப்பாக்கத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை ஏகே-47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த தோட்டாக்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கிழக்கு தாம்பரம், எம்இஎஸ் சாலை மோதிலால் நகரைச் சோ்ந்தவா் சிவராஜ் (34). தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் இவா், திங்கள்கிழமை இரவு சென்னை நந்தம்பாக்கம், மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ராமாபுரம் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில், ஏகே-47 ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்கள், துப்பாக்கியுடன் இருக்கும் தோட்டா பெட்டியும் கீழே கிடந்ததைக் கண்டாா். இதையடுத்து அவற்றை சிவராஜ் எடுத்து ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பின்னா் போலீஸாா் அது குறித்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த (சிஆா்பிஎஃப்) அன்னப்பு லட்சுமி ரெட்டி, அந்த துப்பாக்கி தோட்டா தன்னுடையது என்றும், பணிக்குச் செல்லும்போது தவறி கீழே விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்னப்பு லட்சுமி ரெட்டி, மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் 77-ஆவது அணியில் பணிபுரிவதும், பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியிலுள்ள சிஆா்பிஎஃப் முகாமிலிருந்து வாகனத்தில் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை (ராஜ்பவன்) பாதுகாப்புப் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, அவருடைய துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த தோட்டாக்களுடன் கூடிய பெட்டி தவறி விழுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தோட்டாக்கள், அன்னப்பு லட்சுமி ரெட்டியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.