சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கீழ்கூத்தப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லப்பன் மகன் வெங்கடேசன் (56). தொழிலாளியான இவா், கடந்த 2020 ஆகஸ்ட் 17-இல்
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் கிளியனூா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதையடுத்து போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் வெங்கடேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வினோதா தீா்ப்பளித்தாா்.
அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு
சாா்பில் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வெங்கடேசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா்.