Vijay Sethupathi: ``ஆக்ஷன் சினிமா மீது என் மகனுக்கு இருக்கும் ஈடுபாடு!" - விஜய் ...
சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்
சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மர்மமான நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணத்தை விரிவாகக் காண்போம்.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 'சான் டா யா' (Chan Da Ya) என்று அழைக்கப்படும் மலைப்பாறை, எரிமலை போலவோ அல்லது வேறு எந்த இயற்கைச் சீற்றங்கள் போலவோ இல்லாமல், அமைதியான அதிசயத்தை நிகழ்த்துகிறது.

அறிவியல் என்ன சொல்கிறது?
புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைப்பாறையை ஆய்வு செய்தபோது, சில தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த மலைப்பாறை இரண்டு விதமான பாறைகளால் ஆனதாக அறியப்பட்டுள்ளது.
மென்மையான சுண்ணம்புப் பாறை மற்றும் கடினமான பாறை அடுக்குகள் கலந்து இங்கு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக காற்று மற்றும் மழையால் மென்மையான பாறை அடுக்குகள் அரிக்கப்படுவதாகவும், ஆனால் அதனுள் இருக்கும் கடினமான முட்டை வடிவிலான பாறைகள் அரிக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
மென்மையான பாறை அடுக்குகள் முழுமையாக அரிக்கப்பட்ட பிறகு உள்ளே இருக்கும் கடினமான முட்டைக் கற்கள் மெதுவாக வெளிப்பட்டு இறுதியில் பாறையிலிருந்து பிரிந்து கீழே விழுகின்றன.
ஒரு கல் முழுமையாக வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கற்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ப்ரியன் காலத்தில் உருவானவை என சில புவியியலாளர்கள் கருதுகின்றனர்.
கலாசார முக்கியத்துவம்
இந்த மலைக்கு அருகில் உள்ள குலு சாய் கிராமத்தில் வசிக்கும் 'ஷூய்' (Shui) பழங்குடியின மக்களுக்கு, இந்த முட்டைக் கற்கள் வெறும் பாறைகள் அல்ல.
அவர்கள் இவற்றை அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும், தங்களைக் காக்கும் புனிதப் பொருளாகவும் கருதுகின்றனர். பல குடும்பங்கள் இந்த கற்களை தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இது அவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.





















