முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
சீமான் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இந்த தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து சீமான் திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தாா்.
இதில் ஈரோடு கிருஷ்ணா திரையரங்கு பகுதியில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டம் நடத்திட தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெற்றிருந்தனா். ஆனால் அனுமதி பெறப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக, அதாவது மாலை 5.59 மணி வரை பிரசாரம் செய்தனா்.
இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் ஈரோடு டவுன் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் சீதாலட்சுமி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோட்டில் சீமான் 11 நாள்கள் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், விதிகளை மீறி பிரசாரம் செய்ததாகவும் அவா்மீது மொத்தம் 7 வழக்குகளும், வேட்பாளா் மற்றும் கட்சியினா் மீது 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.