செய்திகள் :

சுயேட்சையிடம் டெபாசிட் இழந்த திமுக; நோட்டாவுக்கு பின்னால் பாஜக; அதிமுக அவுட்! | RK நகர் ஆடுபுலி 09

post image

மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்த வி.கே.சசிகலா 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகம், சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் தொடங்கிய அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் தீவிர தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் சசிகலாவின் புதிய கட்சி 2026 தேர்தலில் கவனம் பெற்றுள்ளது.

சசிகலா
சசிகலா

தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் உதயமாவது இயல்பானதே, ஆனால், ஒரு இடைத்தேர்தலில் பல கட்சிகள் தோன்றியது என்று சொன்னால், அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான். பல அரசியல் ஆடுபுலி ஆட்டங்களைக் கண்ட ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியால், சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கண்டார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, தேர்தலில் போட்டியிட்ட இயக்குநர் கங்கைஅமரன், வேட்புமனு தாக்கல் செய்த விஷால் என்று ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

ஒரு சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்தினார். திமுகவின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் தேர்தலிலேயே திமுக டெபாசிட் இழந்தது. தேசியக் கட்சியான பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்றது.

ஒவ்வொரு நாளும் ஆடுபுலி ஆட்டங்களைக் கண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பல அரசியல் திருப்பங்களை உண்டாக்கியது. ஆர்.கே.நகர் எனும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல்களில் ஒருமுறை ஜெயலலிதாவும், மற்றொரு முறை டிடிவி தினகரனும் வெற்றி பெற்றனர்.

ஆர்.கே. நகர்

2014 செப்டம்பர் 27 அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தார். அந்த வழக்கின் மேல்முறையீட்டில் 2015 மே 11 அன்று உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். மீண்டும் 2015 மே 23 முதலமைச்சரான ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் போட்டியிட வசதியாக ஆர்.கே.நகர் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் 2015 மே 17 அன்றே ராஜினாமா செய்திருந்தார்.

ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களுக்கும் வார்டு வாரியாக வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் களம் கண்டனர். ஜூன் 27 அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது.

மீண்டும் வந்த சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் ஆர்.கே.நகர் தொகுதியிலேயே போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார் ஜெயலலிதா. 2016 டிசம்பர் 5 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு 17 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்தார் ஜெயலலிதா.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி இருவருக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஆனார். அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டனர்.

அச்சூழ்நிலையில்தான், காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 2017 ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரு அணியாக அதிமுக இருந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கினார். முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி நேரடியாக களத்திற்குச் சென்று, தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரனை ஆதரித்துப் பரப்புரை செய்தார்.

அதிமுக இரண்டாகப் பிளவுபட்டிருந்த நேரம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிட்ட மதுசூதனன் வெற்றி பெற வேண்டுமென தீவிர பரப்புரை செய்தனர். அதிமுக யாருக்கு என்பதை நிரூப்பிக்கும் தேர்தலாக பார்க்கப்பட்டதால் இரு அணியினரும் முழுவீச்சில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

`அதிமுக அம்மா அணி' என்பது துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலும் இயங்கியது. `அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி' என்பது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டது.

வி.கே.சசிகலா சிறையில் இருந்தார். ஆனாலும், சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்றே இரு அணிகளுக்கும் பெயர் வைத்தனர். ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, பாஜக வேட்பாளராக இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோரும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டனர். இரட்டை இலை முடக்கப்பட்டதால், அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னம் வழங்கப்பட்டிருந்தது.

அதிமுக அம்மா அணி வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.4000 வழங்குவதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி குற்றம் சாட்டியது. ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டினர். எதிர்கட்சித் தலைவரா இருந்த மு.க.ஸ்டாலின் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் தெரிவித்தார்.

தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பாக திடீரென இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே இரவு 11 மணிக்கு பிரேக்கிங் நியூஸ் வெளியாவது வாடிக்கையாக இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பும் டிசம்பர் 10, இரவு பத்து மணிக்கு மேல்தான் வெளியானது.

இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக 29 பக்க அறிக்கையை வெளியிட்டது தேர்தல் ஆணையம். ”ஆர்.கே. நகர் தொகுதியில் 61 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் இருந்தனர். 256 வாக்குச்சாவடிகளுக்கும் 256 மத்திய அரசு ஊழியர்கள் நுண்பார்வையாளர்களாக இருந்தனர். 12க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், 2 ஐஏஎஸ், 2 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்தனர்.

ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம், செல்போன் ரீசார்ஜ், பால், செய்தித்தாள் சந்தா ஆகியவற்றுக்கான கூப்பன்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டது. விளக்கு, டி-சர்ட், எவர்சில்வர் தட்டு, காமாட்சி விளக்கு, செல்போன், சேலை உட்பட பரிசுப் பொருட்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன.

அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்காக, ஒரே நிறுவனத்தில் 10 ஆயிரம் தொப்பிகள் தினமும் வாங்கப்பட்டன.

அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி வேட்பாளர் மதுசூதனனுக்காக சின்னம் பொறிக்கப்பட்ட டிசர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

வரி ஏய்ப்பு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் கணக்காளரிடம் இருந்து ரூ.89 கோடி பணப்பட்டுவாடா ஆவணங்கள் எம்.எல்.ஏ.விடுதியில் கைப்பற்றப்பட்டன.

தேர்தல் ஆணையத்திற்கு சவால் விடும் இந்தப் போக்கினால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது போல, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.” என்று அறிக்கை அளித்தது தேர்தல் ஆணையம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான சில நாட்களில் ஏப்ரல் 18 அன்று டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில், இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மே 1 அன்று டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு, 15 நாள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, எடப்பாடி கே பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆகஸ்ட் 21 அன்று இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அதிமுக கட்சி அலுவலகத்தில் ஒன்றாக கைகோர்த்தனர். அன்றே, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவர் நியமித்த நிர்வாகிகள் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒன்று சேர்ந்ததால், அதிமுகவிற்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் வழங்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.

அ.தி.மு.க -பன்னீர் - எடப்பாடி

மீண்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஓபிஎஸ் அணியில் போட்டியிட்ட மதுசூதனன் அதிமுக வேட்பாளர் ஆனார். சசிகலா அணியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் சுயேட்சையாகப் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் கங்கை அமரன் மாற்றப்பட்டு கரு. நாகராஜன் வேட்பாளர் ஆனார்.

சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு போட்டியாக கே.தினகரன், எம்.தினகரன், ஜி.தினகரன் ஆகிய சுயேட்சை வேட்பாளர்களும், அதிமுக வேட்பாளர் இ. மதுசூனனுக்கு எதிராக எஸ்.மதுசூதனன், ஆர்.மதுசூதனன் ஆகிய சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். முதல் தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராகப் போட்டியிட்ட இ.மதுசூதனன், இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்தில் களமிறங்கினார். அடுத்த இடைத்தேர்தலில் மதுசூதனன் இரட்டை இலை சின்னம் பெற்றிருந்தார். ஆனால், சுயேட்சை வேட்பாளர் எஸ்.மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ஆர் கே நகர் தொகுதியில் முகாமிட்டனர். சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அதிமுகவில் இருந்து விலகிய அல்லது நீக்கப்பட்ட மற்றொரு தரப்பினர் தீவிரப் பரப்புரை செய்தனர்.

2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2015 சட்டமன்ற இடைத்தேர்தல், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தல், 2017 ஏப்ரலில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து, 2017 டிசம்பரில் சட்டமன்ற இடைத்தேர்தல் என்று அடுத்தடுத்து அரசியல் கட்சிகளின் வருகையால் ஆர்.கே.நகர் மக்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

பணப்பட்டுவாடா புகாரால் ரத்தான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2017 டிசம்பர் 21 அன்று நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியான போது, டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். தினகரனின் வெற்றிக் கணக்கு அவருக்கு அதிமுகவில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராகவும் முன்னிறுத்தப்பட்டது.

2015 இடைத்தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,710 வாக்குகள் மட்டுமே பெற்றார். வாக்கு வித்தியாசம் 1,50,722.

அடுத்து வந்த 2016 பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 39,545.

2017 இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் இ. மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 40,707.

ஆளுங்கட்சியான அதிமுக தோல்வி கண்டது. பிரதான எதிர்கட்சியான திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகளும், பாஜக கரு. நாகராஜன் 1,368 வாக்குகளும் பெற்றனர். ஆனால் நோட்டாவிற்கு பாஜகவைவிட அதிகமாக 2,348 வாக்குகள் கிடைத்திருந்தது.

ஒரு இடைத்தேர்தல் பல அரசியல் கணக்குகளை எடுத்துக் காட்டியது என்றால் அது ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தான்.

(ஆடுபுலி ஆட்டம் தொடரும்)

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" - எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து ஜாம்பவானும், நடிகரும், போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஐ.எம்.விஜயன் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் ... மேலும் பார்க்க

இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?

புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங... மேலும் பார்க்க

``கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" - அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்த... மேலும் பார்க்க

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந... மேலும் பார்க்க

'ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?'- அன்புமணி கேள்வி

'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்கள் தேவா, ஜீவாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வ... மேலும் பார்க்க

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல... மேலும் பார்க்க