போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?
`சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம்.!' - எழுத்தாளர் ய.மணிகண்டன்
49-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் நூல் பதிப்பியல் துறையில் நிபுணருமான சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி துறை பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களிடம் சுவடியியல் மற்றும் நூற்பதிப்பியல் குறித்து உரையாடினோம்.
``தமிழில் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கியங்கள் மட்டுமல்ல, பல துறை நூல்களும் ஓலைச்சுவடிகளில் தான் இடம் பெற்றுள்ளன. சி.வை.தாமோதரம்பிள்ளை உ.வே.சா, வையாபுரி பிள்ளை ஆகியோர் நூல் பதிப்பில் முக்கியமான நபர்கள். ஆனால் எல்லா நூல்களுமே ஆராய்ச்சி பதிப்புகளாக வெளிவரவில்லை.
ஆய்வுப் பதிப்பு என்பது கம்பராமாயணம் என எடுத்துக் கொண்டால், நூற்றுக்கணக்கில் ஓலைச்சுவடிகள் உள்ளன. திருக்குறளுக்கு பல நூறு ஓலைச்சுவடிகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒப்பிட்டு என்ன வேறுபாடு, படிப்பவர்கள் புரிந்து கொள்ள தேவையான அகராதிகளை உருவாக்கி, வெவ்வேறு வேறுபாட்டின் மூலம் எது மூலமாக இருக்கும்(மூலபாடம்) என்பதை சிந்தித்து, இவற்றையெல்லாம் கொடுப்பதுதான் சிறந்த பதிப்பு என்ன பொருள்.

தமிழில் தோன்றிய எல்லா பதிப்புகளுக்கும் ஆராய்ச்சி பதிப்புகளாக உருவாகவில்லை. அதை அப்படியே இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்துக்கு கொண்டு வந்தால் பாரதியார், பாரதிதாசனுக்கு கூட அந்த ஆய்வு பதிப்புகள் வெளிவரவில்லை. ஓலைச்சுவடியை பதிப்பிக்கும் நெறிமுறை பற்றி பயில்வது ஓலைச்சுவடிகளை மட்டுமல்லாமல் நவீன இலக்கியத்தையும் பதிப்பிக்க பயன்படும். தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஓலைச்சுவடிகள் உள்ளன.
உ.வே.சா நூலகத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு அப்பால் கல்கத்தாவில் ஓலைச்சுவடிகள் உள்ளது. வையாபுரி பிள்ளை, தான் சேகரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் கல்கத்தாவில் உள்ள நூலகத்திற்கு கொடுத்துள்ளார்.
மாஸ்கோ, லண்டன் போன்ற உலகின் பெருநகரங்களிலும் உள்ளது. புறநானூறு, சீவகசிந்தாமணி போன்ற நூல்களுக்கு ஆய்வு பதிப்புகள் வந்திருப்பது போல அனைத்து இலக்கியங்களுக்கும் ஆய்வு பதிப்புகள் வெளிவர ஓலைச்சுவடியில் பற்றி பயில்வது அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.
சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம். நவீன தமிழ் அறிவியக்கத்தின் வழிகாட்டியாக இருக்கும் வையாபுரி பிள்ளையின் பங்கு தமிழ் நூற்பதிப்பில் அளப்பரிய ஒன்று. வையாபுரி பிள்ளையின் ஆய்வு, தமிழ் ஆய்வு முறையில் வளர்ந்து வரும் ஆய்வியல் அணுகுமுறையாக உருவெடுத்துள்ளது. ஓலைச்சுவடி பதிப்பின் மூலமாகத்தான் இன்று தமிழில் இத்தனை இலக்கியங்கள் கால ஓட்டத்தில் எஞ்சி நிற்கின்றன.

தமிழில் உள்ள எல்லா இலக்கியங்களும் நூல்களும் பழையவை. சிறந்த பதிப்பாக வெளியே வந்திருப்பினும் ஆராய்ச்சி பதிப்பாக எதுவும் வெளிவரவில்லை. அது வரவேண்டும். அப்படி வருவதற்கு சுவடியியல் புலமை அவசியமான ஒன்று. அதை நோக்கி செல்வதற்கு சுவடியில் கல்வி மிக மிக தேவை. ஓலைச்சுவடி பழமையானது அதில் என்ன தெரிந்து கொள்வதற்கு இருக்கிறது என்றெல்லாம் இல்லை.
நாம் செய்ய வேண்டிய வேலை, போக வேண்டிய இலக்கு மிக நீண்டது. 10% பதிப்புதான் ஆராய்ச்சி பதிப்பாக வெளியே வந்துள்ளது. 90 சதவீதம் பழைய இலக்கியங்கள் ஆராய்ச்சி பதிப்புகளாக வெளிவரவில்லை. அதற்கு சுவடியியலில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த சுவடியியல் நவீன இலக்கிய படைப்புகளுக்கும் உதவும் என்பதை மறந்து விடக்கூடாது.
ஓலைச்சுவடியில் இருந்து இன்று நவீன யுகத்தில் திரைக்கு மாறியுள்ளோம். என்னதான் நவீன தொழில்நுட்பத்தில் வாசிப்பு திரையில் மாறினாலும் காகிதங்கள் தான் காலத்தின் கட்டாயமான ஒன்று. காகிதத்தை தொட்டு படிக்கும் உணர்வை வேறு எந்த பொருளாலும் இட்டு நிரப்ப முடியாது." என்றார்.



















