கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர்! - 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு...
`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' - திமுக தட்டி தூக்கிய பின்னணி
திமுகவில் வைத்தி!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வர, இன்னும் ஒருசில வாரங்களே இருக்கின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தேர்தல் நேரத்தில் வலுசேர்க்க முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக இருக்கிறது.
அதிலும் ஆளும் திமுக தரப்பு தொடர்ச்சியாக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து பெரிய தலைகள் தூக்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியில் சேர்ந்திருந்த நிலையில், அடுத்ததாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றவர்கள் திமுகவில் இணைந்தனர்.
இந்த சூழலில் அதே ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான வைத்திலிங்கம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த இணைப்பு பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து வைத்தியலிங்கத்துக்கு நெருங்கிய வட்டாரத்திலும் அறிவாலய வட்டாரத்திலும் விசாரித்தோம்.
தவெக-வுக்கு இசைவு காட்டவே இல்லை!
"ஓ.பி.எஸ அணியிலிருந்து இனி எந்த பயனும் இல்லை. 'தேர்தல் நெருங்கும் நேரத்தில், இப்படி எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது எனக்கு மட்டுமல்ல என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லதல்ல' என்று வைத்திலிங்கம் சொல்லிக்கொண்டே இருந்தார். அதிமுகவில் சேர்வதுவே அவரது பிரதான ஆசையாக இருந்தது.
ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற நிலையில் வேறு முடிவு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. த.வெ.க-விலிருந்து தொடர்ச்சியான அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அண்ணனின் ஆதரவாளர்களும் த.வெ.க-வில் இணைய வலியுறுத்தினார்கள். ஆனால், அதற்கு என்னவோ அவர் இசைவு காட்டவே இல்லை.
திமுகவின் அசைன்மெண்ட்!
இந்த சூழலில் தான் வைத்திலிங்கத்தின் நெருங்கிய உறவினரான திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் வைத்தலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். கூடவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் வைத்திலிங்கத்திடம் பேசினார்.
`திமுக தரப்பில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நாங்கள் செய்துகொடுக்கிறோம். எங்களுடன் வந்துவிடுங்கள்' என்று சொல்லி இருக்கிறார்கள். பதிலுக்கு வைத்தி, `எனக்கு மட்டுமல்ல என்னைச் சேர்ந்தவர்களுக்கும் சீட், கட்சி பதவி எல்லாம் வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.
எல்லா கோரிக்கைகளும் சுமுகமாக முடிய, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்திருக்கிறார். கட்சியில் சேர்ந்திருக்கும் அவருக்கு திமுக தரப்பிலிருந்து புதிய அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
டெல்டாவை பொறுத்தவரை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சமபலத்தில் இருக்கின்றன. கடந்த தேர்தலைப் பொறுத்தவரை டி.டி.வி தனித்து போட்டியிட்டதால் அதிமுக வாக்குகள் பிரிந்து அது திமுகவுக்குப் பலமாக அமைந்தது. இப்போது, டி.டி.வி என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். அது அதிமுகவுக்குக் கூடுதல் பலம்.

டெல்டாவை பொறுத்தவரை எந்த கட்சியிலிருந்தாலும் வைத்திலிங்கத்துக்கு என்று ஒரு தனி செல்வாக்கு இருக்கிறது. கூடவே ஆளும் கட்சியின் அதிகாரமும் சேர்ந்துகொள்ள டெல்டாவில் அதிமுக தோல்வியைச் சந்திக்கத் தேவையான அனைத்து வேலைகளையும் இப்போதிலிருந்தே தீவிரமாகப் பார்க்கச் சொல்லியிருக்கிறது திமுக தலைமை.
வைத்திலிங்கத்தைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் திமுகவில் இணையவுள்ளனர். கூடவே வரும் 26-ம் தேதி தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெறும் திமுக மகளிரணி டெல்டா மண்டல மாநாடு சமயத்தில் தனது ஆதரவாளர்கள் பலரையும் திமுகவில் இணையவைக்க ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார்.
திமுக தலைமை ஒரு கணக்குப் போட்டு இவருக்கு வேலைகளைக் கொடுத்ததுபோலவே, கூடுதல் தொகுதிகளில் வேலைபார்த்து திமுகவை வெற்றிபெறவைத்தால் வெயிட்டான அமைச்சர் பதவியை வாங்கிவிடலாம் என்று இப்போதிலிருந்தே அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக இருக்கிறார்" என்றார்கள் விளக்கமாக.


















