AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு
செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் - என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர்.
அங்கிருந்த ராக்கெட் லாஞ்சரை எமன்சு யாதவ் (21) என்ற மாணவர் காலால் உதைக்கும்போது, அது கல்லில் மோதி வெடிக்க பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார்.

மேலும் அவருடன் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த அனுமந்தபுரம் காப்புக்காடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

ராணுவத்தினர் பயிற்சியின் போது ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தி மலையை நோக்கிச் சுடுவது வழக்கம். அவ்வாறு ஏவப்படும் குண்டுகளில் சில நேரங்களில் வெடிக்காமல் போகும் குண்டுகள் அங்கேயே விடப்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறது.
















