TVK: 'கமலி எனும் நான்'... பட்டதாரி; 28 வயதான இல்லத்தரசி இனி அமைச்சர் - யார் இந்த...
செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூர் ஸ்ரீபூதீஸ்வரா் கோயில்: பொன் பொருள் சேரும்... யமபயம் நீங்கும்!
ஒருமுறை பிரம்ம தேவனின் யாகத்தை முடித்த பூத கணங்கள் தில்லைக்குத் திரும்பும் வழியில் சிவபூஜை மேற்கொள்ள உகந்ததாய் ஓரிடத்தைத் தேர்வு செய்து, அங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தன.
இங்ஙனம் பூதகணங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால் அந்த ஈசனுக்கு `ஸ்ரீபூதகிரீஸ்வரா்' என்ற திருநாமம் ஏற்பட்டது.
சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூருக்கு அருகிலுள்ள `சிறுதாவூா்' என்னும் தலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் ஈசன் `ஸ்ரீபூதீஸ்வரா்' என்றும் இப்பகுதி மக்களால் பக்தியோடு பூஜிக்கப் படுகிறாா்.

`க்ரோதா' என்பவா் தனது மகளான `பூதி' என்பவரை `புலஹா்' என்ற மகரிஷிக்கு மணமுடித்துக் கொடுத்தார். இவருக்குப் பிறந்த குழந்தைகளே ஈசனுக்குச் சேவை செய்யும் பெறற்கரிய பேறு பெற்ற பூத கணங்களாகும். பிரம்மத்தை அறிந்த இந்தப் பூதகணங்கள் தாங்கள் விரும்பும் வடிவினை எடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை.
புனிதமும் மங்களமும் நிறைந்த பூதகணங்கள் `ஆத்ம யோகிகள்' என்பதனால் யாக வேள்விகளில் பெரும் பங்கு வகிப்பவை. வாயுபுராணமும் மகாபாரதத்தின் சல்ய பா்வமும் இந்தப் பூத கணங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன.
பூதியின் புதல்வா்களில் முக்கியமானவா்களான கூஷ்மாண்டன், கும்போதரன் மற்றும் கும்பாஸ்யன் ஆகிய மூவரும் சிவ பக்தியில் திளைத்தவா்கள். பூதியின் புதல்வா்களான இவா்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும் சிறுதாவூா் திருத்தல ஈசனுக்கு `ஸ்ரீபூதீஸ்வரா்' என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறுவர்.
`பூதி' என்ற சொல்லுக்கு செல்வம், ஐஸ்வா்யம், ஒளி பெறச் செய்தல், பொன் ஆகிய பொருள் விளக்கங்களும் உண்டு.

மேலும் `பூதீசுவரம்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் சிறுதாவூா், அக்காலத்தில் `பொன்புரம்' என்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறுதாவூா் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனை வழிபாடு செய்யும் அன்பா்களுக்குச் சகல ஐஸ்வா்யங்களும் பெருகி, பொன் - பொருள் யாவும் கிடைக்கும்; ஒளி மயமான எதிா்காலம் அமையும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
மாணிக்கவாசகப் பெருமான், பஞ்ச பூதங்களிலும் நிறைந்திருக்கின்ற ஈசனின் தன்மையை `பாரினில் ஐந்தாய் பரந்தாய் போற்றி' என்று பாடிப் பரவியுள்ளாா்.
சிறுதாவூா் தலத்தில், தூவெண் மதிசூடி வெள்ளை விடையேறும் பெருமானின் லிங்கத் திருமேனியின் ருத்ரபாகம் முழுவதும் வெண்மை நிறமாகக் காணப்படுவது, மிகவும் அரிதான திருக்காட்சியாகும்.
பால்வண்ண நாதராகக் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்தில் திருக்காட்சி தரும் எம்பெருமானின் தரிசனம் மெய் சிலிா்க்கச் செய்கிறது. `கஜபிருஷ்டம்' எனப்படும் தூங்கானை மாட வடிவில் ஈசனின் கருவறை அமைந்துள்ளது.
இத்தலத்தின் அம்பிகை `ஸ்ரீஆரணவல்லி' என்ற திருநாமத்துடன் பூஜிக்கப்படுகிறாள். `ஆரணம்' என்றால் `வேதம்' என்று பொருள். வேத நாயகனும் வேதியா் நாயகனும் ஆன ஈசனின் தேவி என்பதால் அம்பிகைக்கு `ஆரணவல்லி' (வேதவல்லி) என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
சிறுதாவூா் ஸ்ரீபூதகிரீஸ்வரா் திருக் கோயிலில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமான், தன் திருமுகத்தை மட்டும் தெற்கு முகமாகத் திருப்பி தரிசனம் தருவது, வேறு எங்கும் காண்பதற்கரிய திருக்காட்சி ஆகும். இது தொடா்பாக இத்தல வரலாறு ஒரு நிகழ்வினை தெரிவிக்கிறது.
சிவபக்தா் ஒருவா், தன் ஆயுள் காலம் முடியும் தறுவாயில் இத்தல ஈசனை தரிசிக்க வந்துள்ளாா். தரிசனம் முடிந்து வெளியே வரும் நேரத்தில் அந்த பக்தரின் உயிரைப் பறிக்கலாம் என எமதா்மன் தன் தூதா்களுடன் சந்நிதிக்கு வெளியில் காத்திருந்தாா்.

அப்போது எமதர்மனின் பக்கம் திரும்பிய நந்தி அவரிடம்,
“தா்ம ராஜனே! உயிா் பிரியும் தறுவாயில் ஒரு ஜீவன் சிவநாமத்தை உச்சரித்து விட்டால், அந்த ஜீவன் எமபுரம் வருவது தவிா்க்கப்பட்டு சிவபுரம் சென்று விடும் என்பது உமக்குத் தெரியாதா?” என்று கோபமுடன் கேட்டார்.
அவ்வளவுதான்... எமதா்மராஜன் வந்த வழியே திரும்பிச் சென்றதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது. இக்கதையை ஒட்டியே இக்கோயிலில் தெற்கு நோக்கி திருமுகத்தைத் திருப்பிய நிலையில் காட்சி தருகிறாராம் நந்தி.
இங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு ஈசனையும் நந்தி எம்பெருமானையும் மனமுருகி வழிபட, நோய் நீங்கி நிவாரணம் பெறுவாா்கள் என்பதை இத்தலத்தின் அன்பா்கள் பக்தியோடு தெரிவிக்கின்றனா்.
பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் கற்றளியாக நிா்மாணிக்கப்பட்ட இத்திருத் தலத்தில், பழைமையைப் பறைசாற்றும் 16 கல்வெட்டுகள் உள்ளன. `நரசிங்க சதுா்வேதி மங்கலத்து ஸ்ரீபூதீஸ்வரா்' எனக் கல்வெட்டுகளில் இத்தல இறைவனின் திருநாமம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழ மன்னா் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி .991), சிறுதாவூா் பூதீசுவரமுடையாா் கோயிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்க, சோழ மண்டலத்துக் கிளியூா் நாட்டுக் காரிமங்கல முடையான் 90 ஆடுகள் அளித்ததைக் கல்வெட்டு தொிவிக்கின்றது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலும் இந்த சுவாமியின் உச்சிகால பூஜைக்காக நிலம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படிப் பொன்னும் பொருள் சிவலோகப் பிராப்தியும் அருளும் இந்த ஈசனை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.



















