Iran Protest: மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்! என்ன செய்ய வேண்டும் | IPS Finance ...
சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவேற்றி வந்ததால் அவரை சிலர் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், சைஜூ பதிவிடும் வீடியோக்களுக்கு கமெண்ட்ஸ்களை தெரிவித்து வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சென்னை இளம்பெண்ணுடன் சைஜூ போனில் நட்பாக பேசி பழகி வந்திருக்கிறார். பின்னர் இந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. அதன்பிறகு இருவரும் வீடியோ காலில் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் இளம்பெண்ணை உருக, உருக காதலிப்பதாக நடித்த சைஜூ, நீயும் நானும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என இளம்பெண்ணை மூளைச்சலவை செய்திருக்கிறார். முதலில் சம்மதிக்காத இளம்பெண்ணை, நீ என்னை நம்பவில்லையா என கேட்டிருக்கிறார் சைஜூ. அதன்பிறகே இளம்பெண்ணும் காதலன் சைஜூவை நம்பி, வீடியோ காலில் நிர்வாணமாக பேசி வந்திருக்கிறார். அதை மற்றொரு செல்போனில் வீடியோவாக எடுத்த சைஜூ, தன்னுடைய சுயரூபத்தை இளம்பெண்ணிடம் காண்பித்திருக்கிறார். உன்னுடைய நிர்வாண வீடியோ, படங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அதை சமூகவலைதளத்தில் வெளியிடாமலிருக்க நான் கேட்கும் பணத்தை நீ எனக்கு அனுப்ப வேண்டும் என சொல்லி மிரட்டியிருக்கிறார். வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதிய இளம்பெண், சைஜூ கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த வகையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை இளம்பெண்ணை மிரட்டி பறித்த சைஜூ, மீண்டும் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால், இளம்பெண், விவரத்தை குடும்பத்தினரிடம் கூறியதோடு தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகாரளித்தார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸாரை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இளம்பெண் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் சைஜூவை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் புகார் கொடுத்த இளம்பெண் மட்டுமல்லாமல் இன்னும் சிலரை சைஜூ ஏமாற்றியது தெரியவந்தது. அதனால் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய சைஜூவின் இரண்டு செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் எனவும் விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்குப்பிறகு பைக் ரேஸர் சைஜூவை கைது செய்து தாம்பரம் மத்திய குற்றபிரிவு போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.



















