திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் த...
சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!
சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டி மேரியின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மேரியைக் கொலை செய்தது பெரிய நொளம்பூரைச் சேர்ந்த முதியவர் ஏழுமலை, (70) எனத் தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி மேரிக்கும் கைது செய்யப்பட்ட ஏழுமலைக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததும் அதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மூதாட்டி மேரியை கையால் தாக்கியதோடு அவரின் தலையை தரையில் மோதியிருக்கிறார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு மேரி அணிந்திருந்த நகைகளை ஏழுமலை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. ஏழுமலையிடமிருந்து பறிமுதல் செய்த மேரியின் நகைகளை ஆய்வு செய்த போது அவை கவரிங் எனத் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கூறுகையில், ``வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மேரி, எப்போதும் தங்க நகைகளை அணிந்திருந்தார். அதை நோட்டமிட்ட அதே ஏரியாவைச் சேர்ந்த முதியவர் ஏழுமலை, மேரியை மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். மேரியிடமிருந்து நகைகளை பறிக்க ஏழுமலை முயன்றபோது அதற்கு மூதாட்டி மேரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மேரியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த கம்மல்கள், செயின்களைப் பறித்திருக்கிறார். இந்த கொடூர தாக்குதலில் மேரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மேரியை கொலை செய்து நகைகளைப் பறித்த ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்திருக்கிறோம். மேரி அணிந்திருந்த நகைகள் கவரிங் என்று தெரியவந்திருக்கிறது. கவரிங் நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.


















