'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' - எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?
சென்னை: தலைவலி சிகிச்சைக்குச் சென்ற பெண் மரணம் - முற்றுகையிடப்பட்ட மருத்துவமனை!
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரின் மனைவி பவானி. இவருக்கு திடீரென தலைவலி ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவானியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு பவானியை பரிசோதித்த டாக்டர், அவருக்கு ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு பவானியின் உடல் நலம் மிகவும் மோசமானது. சிறிது நேரத்தில் பவானி உயிரிழந்தார். அதனால் அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததோடு மருத்துவமனை ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் கிடைத்ததும் சூளைமேடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக போலீஸார் மீதும் பவானி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸ் உயரதிகாரிகள், பவானியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் பவானியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.




















