`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தி...
சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு - தலைமறைவான அதிமுக நிர்வாகி!
சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், 13.1.2026-ம் தேதி சௌந்திரபாண்டியார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,
``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கடந்த 13-ம் தேதி மாலையில் மருத்துவமனைக்கு 30 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு எங்கள் மருத்துவமனையின் உரிமையாளரின் காரை உடைத்து சேதப்படுத்தினர்.

அதை தடுக்க முயன்ற ஊழியர்களிடம், `உங்க ஓனர் சங்கை அறுத்துவிடுவேன், தீ வைத்துக் கொளுத்திவிடுவேன்' எனக் கூறியதோடு அவரை அவதூறாக அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசினார்கள். தொடர்ந்து, `எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள், உங்கள் ஓனரின் தம்பி வேலுமணியின் ஆட்கள்' எனக் கூறி எனக்கும் என்னுடைய ஓனருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் வேலுமணி உள்பட 30 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக போலீஸார் சேர்த்தனர்.
அதைத் தொடர்ந்து போலீஸார், சம்பவத்தில் ஈடுபட்ட வேலுமணியின் கார் டிரைவரான சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரைக் கைதுசெய்தனர். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.
இது குறித்து புகார் அளித்த ராஜேஸ்வரனிடம் பேசியபோது, ``சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகாரளித்தும் டிரைவர் தங்க பாண்டியன் மீது மட்டும் போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மற்றவர்களை போலீஸார் கைது செய்யவில்லை. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எனக்கும் என்னுடைய ஓனருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

இது குறித்து சௌந்தரபாண்டியனார் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``புகாரளித்த ராஜேஸ்வரனின் ஓனர் ஜெயதுரை, தி.மு.கவின் முன்னாள் எம்.பியாக இருந்தவர். ஜெயதுரையின் தம்பி வேலுமணி, அ.தி.மு.கவில் தி.நகர் வடக்கு பகுதி செயலாளராக இருக்கிறார். அதோடு வடபழனியில் பிரபலமான மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். அண்ணன் தம்பிக்குள் நடந்து வந்த மோதல் இந்தளவுக்கு வெடித்திருக்கிறது. சி.சி.டி.வி ஆதாரங்கள் அடிப்படையில்தான் வேலுமணியின் டிரைவர் தங்கபாண்டியனை கைது செய்திருக்கிறோம். மற்றவர்கள முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இதுதொடர்பாக வேலுமணியிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.




















