ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்... களைகட்டிய பொங்கல் விழா | Photo...
ஜனநாயகன்: `தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்' - ராகுல் காந்தி
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்திருக்கிறது.

இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாக்கூர், ``வழக்கமாக எதிக்கட்சியினரை அடக்குவதற்கு அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளைத்தான் ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த லிஸ்ட்டில் சென்சார் போர்டும் சேர்ந்து கொண்டது. இதன்மூலம் சினிமாவையும், அதன் கருத்துகளையும் கட்டுப்படுத்தப் பார்க்கின்றனர்." என்றார்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ``ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். அரசியல் காரணங்களுக்காக படம் முடக்கப்படுவது ஆபத்தானது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது." என்றார்.
இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிட நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்டோரும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றனர். அந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தடுக்கும் முயற்சி, தமிழ் கலாசாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும். திரு.மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















