`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியத...
ஜம்முவில் பயங்கரம்: முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி! - பதறவைக்கும் காட்சி!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா (88), மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் பார்க் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஃபரூக் அப்துல்லா சென்றிருந்தார். விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது அவருக்குச் சில அடிகள் பின்னால் நின்றிருந்த நபர், திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து அப்துல்லாவின் தோள்பட்டைக்கு நேராகக் குறிவைத்துச் சுட்டார். அப்போது அங்கிருந்த தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள் உடனடியாகச் செயல்பட்டு தாக்குதல்காரரைத் தள்ளிவிட்டனர். இதில் குண்டு இலக்கைத் தவறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய நபர் ஜம்முவின் புராணா மண்டி பகுதியைச் சேர்ந்த கமல் சிங் ஜம்வால் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த உடனே அங்கிருந்த மக்கள் அவரைப் பிடித்துத் தாக்கினர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையின் போது, தனக்கு இந்தச் செயலில் எவ்வித வருத்தமும் இல்லை என்றும், கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்ததாகவும் அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் உமர் அப்துல்லா, ``அல்லாஹ் கருணை உள்ளவன், என் தந்தை மயிரிழையில் தப்பினார். Z+ பாதுகாப்பு மற்றும் NSG பாதுகாப்பில் உள்ள ஒரு முன்னாள் முதலமைச்சரை இவ்வளவு நெருங்கி ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்தது எப்படி? இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு. பாதுகாப்புப் படையினரின் சமயோசித புத்தியால் மட்டுமே படுகொலை முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது." என்றார்.
बड़ी खबर-
— Narendra Nath Mishra (@iamnarendranath) March 11, 2026
जम्मू में पूर्व मुखमंत्री फारूक अब्दुल्लाह पर एक शादी समारोह में फायरिंग । गोली चली। बाल बाल बचे। डिप्टी सीएम सुरेंद्र चौधरी भी साथ थे।
हमलावर कमल सिंह जामवाल गिरफ्तार! pic.twitter.com/1qkBWGwjho
தாக்குதல் நடந்த போது ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி மற்றும் அரசின் ஆலோசகர் நாசிர் சோகாமி ஆகியோரும் உடன் இருந்தனர். "கடவுளின் அருளால் யாரும் காயமடையவில்லை. இது திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது," என்று சோகாமி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















