மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த க...
டெலிவரி ஊழியர்கள்: "சுகாதாரக் காப்பீடு டு ஓய்வூதியம் வரை" - சமூகப் பாதுகாப்புச் சட்ட வரைவு வெளியீடு
Zomato (சோமேட்டோ), Swiggy (ஸ்விக்கி) உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள், குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு, பாதுகாப்பு இல்லாமை மற்றும் மரியாதையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டிசம்பர் 31, 2025 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய அரசு, கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் ஊழியர்களுக்குப் புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் சில திட்டங்களை அறிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில் ஸ்விக்கி, ஜொமாட்டோ, உபர், ஓலா போன்ற தளங்களில் கிக் வேலை செய்பவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தில் பலன்பெற ஊழியர் ஒரு நிதியாண்டில் ஒரு நிறுவனத்துடன் குறைந்தது 90 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். பல நிறுவனங்களுடன் வேலை செய்தால் 120 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும்.
அதாவது ஒரே நாளில் மூன்று நிறுவனங்களுக்கு வேலை செய்தால், அது மூன்று நாட்களாகக் கணக்கிடப்படும். வருமானம் வந்த நாளிலிருந்து வேலை நாளாகக் கணக்கிடப்படும்.
இதன் அடிப்படையில் வேலை செய்திருப்பவர்களுக்குச் சுகாதாரக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள், தொழிலாளர் மற்றும் நிறுவனம் பங்களிப்பு செய்தால் ஓய்வூதியமும் கிடைக்கும்படியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் பலன்பெறுவதற்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டையுடன் 'இ-ஷ்ரம்' இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அடையாள அட்டை வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், தேசிய சமூகப் பாதுகாப்பு வாரியம் கிக் பணியாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் பணியாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுதல், புதிய வகை ஒருங்கிணைப்பாளர்களை அடையாளம் காணுதல் மற்றும் அவர்களுக்கான நலன்புரிக் கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருக்கும்.

இந்த வாரியத்தில் அமைப்புசாரா துறைத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களிலிருந்து அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட தலா ஐந்து பிரதிநிதிகள் இருப்பார்கள்.
இந்த கிக் பணியாளர்களுக்கு 60 வயது ஆனதும் அல்லது முந்தைய நிதியாண்டில் ஒரு ஒருங்கிணைப்பாளருடன் 90 நாட்கள் அல்லது பல ஒருங்கிணைப்பாளர்களுடன் 120 நாட்கள் பணிபுரியவில்லை என்றாலும், அவர்கள் சமூகப் பாதுகாப்புப் பலன்களுக்குத் தகுதியற்றவர்களாகிவிடுவார்கள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் வரைவு நிலையில் இருக்கும் இந்தத் திட்ட விதிகள், பொதுமக்கள் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ளன.


















