`ஒரு துளி கருப்பு ரத்தம் எடுக்க ரூ.7000' - மூட்டுவலி சிகிச்சை எனக் கூறி முதியவர்...
டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?
இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரசு.
அந்த வகையில், தேனி மாவட்டம் சேர்ந்த பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோரை விவிஜபி பிரிவின் கீழ் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
25 ஆண்டு கால சமூக பணி
பெரியகுளம் அருகே உள்ள சொக்கன் அலை கிராமத்தைச் சேர்ந்தவர் பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன். இவருடைய மனைவி கனகா அங்கன்வாடியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கண்ணன்தான் அவருடைய சமூகத்திலேயே முதல் முதலாக உயர்நிலைப்பள்ளி வரை சென்று படித்தவர்.

தன்னைப் போலவே மற்றவர்களும் கல்வி கற்க வேண்டும் என நினைத்த கண்ணன் தன்னுடைய 17 வயதில் சமூகப்பணி செய்ய தொடங்கியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனைமலைத் தொடர்களில் வசிக்கும் புலையர் மற்றும் இரவாளர், முதுவர் பழங்குடி மக்கள் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி படிக்க வைத்து பலரையும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு உத்வேகமாக இருந்துள்ளார்.

மேலும் பழங்குடியின விவசாயிகளுக்குத் தேவையான பொருட்கள், அரசு மானியங்களைப் பெற்றுத் தருதல், மின்சார வசதி இல்லாத வீடுகளுக்குச் சூரியசக்தி விளக்குகளை ஏற்பாடு செய்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.
வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரிடையாக மக்களுடன் சந்தித்து, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகளைத் தனது மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார்.

இவர்களுடைய சமூகப்பணியைக் கெளரவிக்கும் விதமாக, வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்துள்ளது மத்திய அரசு.


















