ரூ.1,427 கோடி ஆற்று மணல் முறைகேடு: துரைமுருகன் மீது FIR பதிவு; என்னென்ன குற்றச்ச...
தங்கமென ஜொலிக்கும் ஈரோடு மஞ்சள்; குவிண்டால் ரூ.24,000-ஐ கடந்து வரலாறு காணாத புதிய உச்சம்
'மஞ்சள் மாநகரம்’ என்று அழைக்கப்படும் ஈரோட்டில், மஞ்சள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.24,211 முதல் ரூ.24,482 வரை விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு பதிவான ரூ.20,000 என்ற அதிகபட்ச விலையையும், 2024-ம் ஆண்டு உச்ச விலை நிலவரங்களையும் தாண்டி தற்போது இந்தப் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
இதனால், மஞ்சள் இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விலை உச்சத்துக்கான காரணங்கள் குறித்து தெரிவித்த மஞ்சள் கொள்முதலாளர்கள், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய மஞ்சள் ஏல மையங்களிலும் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.24,482 வரை ஏலம் போயுள்ளது.
விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.23,607 முதல் ரூ.23,799 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.21,708 வரையிலும் விற்பனையாகியுள்ளது. வரத்து குறைவு, தரமான மஞ்சளுக்கு நிலவும் கடுமையான போட்டி முக்கியக் காரணமாக உள்ளது.
எல்-நினோ பருவநிலை மாற்றம் மற்றும் சரியான சமயத்தில் போதிய பருவமழை இல்லாததால், ஈரோட்டின் கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் வறட்சி நிலவியது. இதனால் பல விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு மாறினர். மஞ்சள் சாகுபடி வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் முக்கிய மஞ்சள் உற்பத்திப் பகுதிகளான மகாராஷ்டிராவின் மராத்வாடா மற்றும் தெலங்கானாவின் நிஜாமாபாத் ஆகிய இடங்களிலும் வறட்சியால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகத் தேங்கியிருந்த பழைய மஞ்சள் கையிருப்பு தற்போது முழுமையாகக் குறைந்துவிட்டது. பண்டிகைக் காலத் தேவைகள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைவாக இருப்பதால் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்



















