``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரிய...
தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை
திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய சொந்த ஊராகும். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் ஏ.கே.எஸ்.விஜயனுக்குச் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லை என சொல்லப்படுகிறது. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சுமார் 300 பவுன் கொள்ளை போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த ஏ.கே.எஸ்.விஜயன் தரப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிலர் கூறுகையில், ஏ.கே.எஸ். விஜயன் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருக்கிறார். டெல்லி மற்றும் சென்னையில் இல்லாத நாட்களில் கட்சி வேலை இருக்கும் பட்சத்தில் தஞ்சாவூர் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏ.கே.எஸ். விஜயன் குடும்பத்தினர் அடிக்கடி வீட்டில் இல்லாமல் பூட்டிவிட்டு வெளியே செல்வதை கொள்ளையர்கள் நோட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஏ.கே.எஸ். விஜயனின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மகன் தஞ்சாவூரில் இறந்துவிட்டார். இதில் கலந்துகொள்வதற்காகவும் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் கொள்ளை போன நகை சுமார் 300 பவுன் இருக்கும் என சொல்லப்படுகிறது.














