செய்திகள் :

தஞ்சை மாவட்டம் நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்: திருமணம் கைகூடும்; தோஷங்கள் அனைத்தும் தீரும்!

post image

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இறங்கி, இடதுபுறம் பிரியும் சாலையின் உள்ளே சென்றால், 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது நல்லூர். தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தின் மகிமைகள் அநேகம். வாருங்கள், அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.

கோயில் என்றாலே மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் சேர்ந்துதான். அப்படிப்பட்ட தீர்த்த விசேஷமே முதலில் நம்மை வரவேற்கிறது. ராஜகோபுரத்துக்கு எதிரே அமைந்துள்ளது சப்த சாகரத் தீர்த்தம்.

இந்தத் தீர்த்தத்தில் ஏழு கடல்களும் வந்து கலப்பதாக ஐதிகம். குந்திதேவி, இந்தத் தலத்தில் நீராடி பிறந்த குழந்தை கர்ணனை ஆற்றில்விட்டதால் உண்டான தோஷம் நீங்கப்பெற்றாள் என்கிறது தலபுராணம்.

நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்
நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்

ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், விசாலமான முதல் பிராகாரத்தை அடையலாம். அங்கே கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தீஸ்வரரைத் தரிசிக்கலாம். வடக்கில் வசந்த மண்டபமும், தெற்கில் துலா மண்டபமும் உள்ளன.

அமர் நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த கதை நிகழ்ந்தது இந்தத் துலா மண்டபத்தில்தான். அடுத்ததாக ஒரு சிறு கோபுரத்துடன் ஒரு வாயில். அதில் நுழைந்தால், நேர் எதிரில் காசி பிள்ளையாரைத் தரிசிக்க முடியும். அவரை வணங்கிவிட்டு இடதுபுறம் திரும்பி, படிக்கட்டுகளில் ஏறிச்சென்றுதான் சுவாமியைத் தரிசனம் செய்யலாம்.

இது மாடக்கோயில்; கோச்செங்கட்சோழன் கட்டப்பட்டது. ‘மாடக் கோயில்’ என்பது, யானை ஏறிப் புக முடியாதவாறு அமைந்தது. பிரதான வாயிலும் அடுத்தடுத்த வாயில்களும் நேர்க்கோட்டில் அமைந்திருக்காது. உள் பிராகாரத்தில் நுழைந்து, சில படிக்கட்டுகள் ஏறிச்செல்வதுபோன்று மூலவர் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், குந்திதேவி சிவனைப் பூஜிக்கும் திருக்கோலம், அமர்நீதி நாயனார், சண்டேசுவரர், துர்கை, நடராசர் நர்த்தனமாடும் திருச்சிற்றம்பலம், சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகள் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.

இந்தப் பிராகாரத்தின் மத்தியில் சுமார் 14 அடி உயர மாடத்தில் இருக்கின்றன, சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள். தென்புறமாக இருக்கும் படிகளில் ஏறி உள்ளே நுழைந்தால், முதலில் கண்களில் படுவது அம்பாள் சந்நிதி. அழகே உருவாக, ஆஜானுபாகுவாகக் காட்சி தருகிறாள் கிரிசுந்தரி.

தமிழில் ‘மலையழகி’ என்று திருப்பெயர். பெயருக்கேற்ப அழகிய உருவம் கொண்டு, மடிசார் புடவையும், மந்தகாசப் புன்னகையுமாக நம்மை ஆட்கொள்கிறாள். அன்னையை வணங்கிவிட்டு, சுவாமி சந்நிதிக்குள் நுழைகிறோம்.

நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்
நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்

கிழக்கு நோக்கி அருளும் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரின் திருமேனி, ஆன்மிக அற்புதங்களில் ஒன்று. ஆம்! தினமும் ஆறு நாழிகைக்கு ஒருமுறை நிறம் மாறுகிறார் இந்தச் சுவாமி. முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறத்தில் காட்சி தரும் இந்தச் சிவனாரின் லிங்கத் திருமேனி, அடுத்தடுத்து முறையே இளஞ்சிவப்பு, உருக்கிய தங்கம், நவரத்தினப் பச்சை ஆகிய வண்ணங்களில் காட்சி தரும்.

கடைசி ஆறு நாழிகைகளில், இன்ன நிறம் என்று இனம்காண இயலாத ஒரு நிறத்தில் காட்சியளிப்பாராம் இந்தச் சிவனார்.

இப்படி ஐந்து நிறங்களில் காட்சி தருவதால், ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்றும், இந்தத் தலத்தில் அமர்நீதி நாயனார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டதால் ஸ்ரீஆண்டார் என்றும், அகத்தியருக்குத் திருமணக் கோலத்தைக் காட்டியமையால் ஸ்ரீகல்யாணசுந்தரர் என்றும், மிகக் பேரழகுடன் திகழ்வதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார் இந்தச் சிவனார்.

சதுர வடிவ ஆவுடையாருடன் கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த லிங்கத் திருவுருவில் துளைகள் இருப்பதைக் காணலாம். `பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதைக் குறிக்கும் துளைகள் இவை’ என்கிறார்கள்.

அவர்களுக்கு இருபுறமும் திருமாலும், பிரம்மாவும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கிறார். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. ஒரே ஆவுடையார் மீது இரண்டு லிங்கங்கள் இருப்பன ஒரு சிறப்பம்சம்.

இங்கே வந்து சங்கல்பம் செய்து, கல்யாண சுந்தரரை வணங்கி வழிபட்டு, மாலை வாங்கிச் சென்றால், 90 நாள்களுக்குள் திருமணம் கைகூடும். இது, பலரும் கண்கூடாகக் கண்ட உண்மை என்கிறார்கள் பக்தர்கள்.

நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்
நல்லூர் கல்யாண சுந்தரர் திருக்கோயில்

இங்கு, பெருமாள் கோயில்களில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுவதுபோல பெருமானின் திருவடிகளைச் சூட்டி அருள்கிறார்கள். பெருமான் அப்பர் சுவாமிகளுக்குத் திருவடி சூட்டி அருளிய தலம் இது.

இங்கே எழுந்தருளியிருக்கும் அஷ்டபுஜ காளி வேறெங்கிலும் காண்பதற்கரிய திருக்கோலம். திருமுகத்தில் சிறிதும் உக்கிரம் இல்லாமல் சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறாள் அன்னை.

ஐந்தைந்து (கூட்டு) இலைகளுடன் திகழும் வில்வ மரமே இக்கோயிலின் தல விருட்சம். பழைமையான இந்த மரத்தை ‘ஆதிமரம்’ என அழைக்கின்றனர்.

கயிலைக்கு ஒப்பாக வைத்து அப்பர் போற்றிய இத்தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

திருப்பனந்தாள் குறிச்சி ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயில்: நீங்காத புகழ் கிடைக்க அருளும் தலம்!

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர் திருப்பனந்தாள். இதற்கு மிக அருகிலுள்ள கிராமம் குறிச்சி. இங்குள்ள ஆலயம்தான் ஶ்ரீகல்யாண கோதண்ட ராம ஸ்வாமி திருக்கோயில். இது ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்றும் தற்போது உ... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம் அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் கோயில்: பணக்கஷ்டம் தீர்க்கும் தலம்!

சோழநாட்டுக் காவிரிக்கரைத் தலங்களுள் ஒன்று அரிசிற்கரைப்புத்தூர். இத்தலத்தின் புராணப் பெயர் அழகாப்புத்தூர். தேவாரப் பாடல்பெற்ற இந்தத்தலத்தில்தான் புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு தந்து இறைவன் ஆட்கொண்... மேலும் பார்க்க

கோவை: கழுதைகளுக்கு நடந்த திருமணம் – மழை வேண்டி நூதன வழிபாடு!

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வறட்சி காலங்களில் பாரம்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: மன சஞ்சலங்கள் அகற்றும் மகாதேவர் சந்நிதி!

சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட க்ஷேத்திரங்களாக... மேலும் பார்க்க

சென்னை குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் : திருமண வரம் தரும் திருத்தலம்!

சென்னையைச் சுற்றியிருக்கும் மூன்று அம்மன் தலங்களை ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். அவை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி கோயில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.!

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.! மேலும் பார்க்க