`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் ...
`தனி முகாம்கள் அமையுங்கள்' - பங்களாதேஷ் பிரஜைகளை நாடு கடத்த மேற்கு வங்க அரசு முடிவு!
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து புதிய முதல்வராக பா.ஜ.க-வை சேர்ந்த சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார். பதவியேற்றவுடன் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே இருக்கும் சர்வதேச எல்லையில் வேலி அமைக்க தேவையான நிலம் உடனே கையகப்படுத்திக் கொடுக்கப்படும் என்று சுவேந்து அதிகாரி குறிப்பிட்டு இருந்தார். மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே 2,200 கிலோமீட்டர் தூரம் சர்வதேச எல்லை இருக்கிறது. இந்த எல்லை வழியாக பங்களாதேஷ் பிரஜைகள் இந்தியாவிற்குள் நுழைந்து சட்டவிரோத ஆவணங்கள் பெற்று வசிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது.
தேர்தலுக்கு முன்பு சிறப்பு வாக்காளர் மறுசீரமைப்பு மூலம் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது பா.ஜ.க அரசு மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை கண்டுபிடித்து நாடு கடத்த முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது, சட்டவிரோத ஊடுருவலை பாஜக தனது முக்கியப் பிரசார விவகாரங்களில் ஒன்றாக முன்னிறுத்தியது.
அதே போன்று, தனது தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்க வரலாற்றிலேயே ஆவணங்களற்ற குடியேறிகளை வெளியேற்றும் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையை முன்னெடுப்பதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை கைது செய்து கை, கால்களை கட்டி தனி முகாம்களில் அடைத்து வந்தார். அதன் பிறகு அவர்களை தனி விமானத்தில் ஏற்றி சம்பந்தப்பட்டவர்களின் நாடுகளில் கொண்டு போய்விட்டனர். கை, கால்களை கட்டி அழைத்துச் சென்று அவர்களது நாட்டில் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ட்ரம்ப் மாடல்
தற்போது டொனால்டு ட்ரம்ப் மாடலை பின்பற்றி மேற்கு வங்கத்தில் வசிக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை கண்டுபிடித்து, அவர்களது ஆவணங்களை அழித்துவிட்டு அவர்களை நாடுகடத்தும் திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. சட்டவிரோத பங்களாதேஷ் பிரஜைகளை கண்டுபிடித்து அவர்களை அடைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி முகாம்களை அமைக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு பிடித்து வைக்கப்பட்டவர்களுக்கும், நாடு கடத்தும் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டினருக்கும் இந்த வசதிகள் தற்காலிக மையங்களாகச் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்கள், அதிகாரிகள் அவர்களின் குடியுரிமை மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்கும் வரையில், இத்தகைய மையங்களில் 30 நாள்கள் வரை தங்கவைக்கப்படலாம். சம்பந்தப்பட்டவர்களின் குடியுரிமை தொடர்பான இறுதி முடிவை மாவட்ட நீதிபதிகள் அல்லது அதற்கு இணையான தரத்திலுள்ள அதிகாரிகள் எடுப்பார்கள்.
மாநிலத்தின் உள்துறை மற்றும் மலைப்பகுதி விவகாரத் துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் பிரிவு இது தொடர்பாக சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவில், "பிடிக்கப்பட்டும் வெளிநாட்டினர்" மற்றும் "விடுவிக்கப்பட்ட வெளிநாட்டுச் சிறைக்கைதிகள்" ஆகியோரை, அவர்களை நாடு கடத்தும் நடைமுறைகள் நிறைவடையும் வரை தங்கவைப்பதற்குத் தேவையான வசதிகளை அமைக்குமாறு மாவட்ட நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் ரோஹிங்கியாக்களைக் கையாள்வதற்கான நடைமுறைகளை விரிவாக விவரித்து, கடந்த ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவுறுத்தலையும் இந்த உத்தரவு குறிப்பிட்டிருந்தது. மேற்கு வங்க அரசின் இந்த உத்தரவால் அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.












