``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட...
தமிழக ஊர்ப்பெயர்களில் 'ஹள்ளி' இணைக்கப்பட்ட விவகாரம்; ஜி.கே.மணியின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன?
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஊர்களின் பெயர்களில் ஹள்ளி என்று இருப்பதை மாற்ற வேண்டும் என்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி வைத்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது.

சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய பென்னாகரம் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, "தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஊர்களின் பெயர்களில் ஹள்ளி என்று வருகிறது.
அஜ்ஜம்பட்டி என்ற ஊர் அஜ்ஜனஹள்ளி என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவழக்கில் அது அஜ்ஜம்பட்டி என்றே அழைக்கப்படுகிறது. மாராண்டாம்பட்டியாக இருந்த ஊர் மாராண்டஹள்ளியாக மாறியுள்ளது, சோம்பட்டி என்ற ஊர் சோமனஹள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
இப்படி எங்கு பார்த்தாலும் ஊர்ப்பெயர்களில் ஹள்ளி என்ற வார்த்தை உள்ளது. அது தெலுங்கா, கன்னடமா, வடமொழியா என்பது தெரியவில்லை, அதனால் நடைமுறை பேச்சு வழக்கில் எப்படி உள்ளதோ அதன்படி ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது இதற்குப் பதில் அளித்த தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், "ஊர்களுக்கு பெயர் வைப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் எம்.எல்.ஏ-வின் கருத்து பரிசீலிக்கப்பட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்களின் பெயர்களைத் திருத்தம் செய்ய முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த நிலையில் இந்தப் பெயர் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.












