செய்திகள் :

அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03

post image

(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.)

கடந்த காலங்களில் அனுதாப அலைகளை கச்சிதமாகப் பற்றிக் கொண்டு அறுவடை செய்த கட்சிகளை, ஆளுமைகளைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? இந்த அத்தியாயத்தில், பழம் நழுவி பாலில் விழுந்தாலும் கூட, விழுந்தது எலுமிச்சம் பழம்போல என்று பாலை திரியவிட்ட கட்சியைப் பற்றியும், கூடவே மக்கள் மத்தியில் மட்டும்தான் அனுதாப அலைகள் ஒர்க் அவுட் ஆகும் என்பதில்லை, கட்சிக்குள்ளேயும் கூட அது பலிக்கும், ஆட்சியையும், அரியணையையும் கைக்குக் கொண்டுவரும் என்று ப்ரூவ் பண்ண ஸ்டாலினையும் பற்றி கொஞ்சம் பேசிக் கலைவோம்.

அதிமுக தலைமை அலுவலகம்

‘அனுதாப அலை’களை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும், சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கு அதிமுக சாட்சியாக நிற்கிறது என்று ஏற்கெனவே சுட்டிக்காடியதை இங்கே நிறுவ முயற்சித்தபோது, சிலவற்றை பட்டியலிடுவது அவசியமாகிறது.

அதில் முதலாவது விஷயம், டிச.5, 2016 அன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிகழ்வு. 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, அவர் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கை மங்கிப் போய்தான் இருந்தது. அதற்கிடையில் அவரை எல்லோரும் கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று பார்த்து வருவதும், பேட்டி கொடுப்பதும் நடந்து கொண்டிருந்தது.

எல்லாம் முடிந்து டிச.5 மாலை அவர் மரணித்தது அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியானது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, தேசியத் தலைவர்கள் பலர், பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பல்வேறு துறை ஆளுமைகள் என அனைவரும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு அணிவகுத்திருந்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் ஸ்டாலின் கூட வந்திருந்தார்.

ஜெயலலிதா மறைவை தங்கள் வீட்டுத் துக்கமாக அனுசரித்த அக்கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என எல்லோர் மீதும் பரிதாபப்பட்டனர்.

அதிமுகவுக்கு ‘ராணுவ ஒழுக்கம்’ கொண்ட கட்சி என்ற அடைமொழியையும், ‘மோடியா... இல்லை இந்த லேடியா?’ வகையறா சவால்களால், ‘உங்களால் நான்; உங்களுக்காகத் தான்’, ‘செய்வீர்களா?’ போன்ற தேர்தல் பிரச்சார பஞ்ச் வசனங்களாலும், மகளிரை குறிவைக்கும் இலவசங்களாலும் தன்னை தன்னிகரற்ற தலைவியாக நிலைநிறுத்தியிருந்த ஆளுமை இல்லாமல் நிற்பவர்களை ‘நாம் தானே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும்’ என்றொரு அனுதாப அலை எஃபக்ட் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்த காலம்.

அதை அப்படியே அறுவடை செய்திருந்தால், 2021-ல் ஆட்சி மாற்றத்துக்கான தேவையே வந்திருக்காது. ஆனால், ‘செய்வீர்களா? செய்வீர்களா?’ என்று கேட்டுச் சென்ற ஜெயலலிதாவுக்கு கட்சியைக் காப்பாற்றி, ஆட்சியைத் தக்கவைக்கும் பணியை செய்தார்களா அதிமுகவினர்?!

ஜெயலலிதா உடல்

அன்றாடம் அக்கப்போர்

அத்தகைய கேள்வியோடு ஜெ. மறைவுக்குப் பிந்தைய சில மாதங்களை திரும்பிப் பார்த்தால், வரிசையாக கண்முன் விரிவதெல்லாம் அதிமுக உட்கட்சிப் பூசலாக மட்டுமே இருக்கும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜெயலலிதாவால் ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். அது தான் ‘அம்மாவின் ஆன்மாவை இன்ஸ்டன்ட்டாக குளிர்விக்கும்’ என்று நம்பினார்களோ என்னவோ! ஆனால், அடுத்துதான் மெயின் பிக்சர் ஓப்பன் ஆனது. முதல்வர் ஓபிஎஸ் ஓகே, ஆனால் கட்சி யார் கட்டுப்பாட்டில் என்று போயஸ் கார்டனில் அன்றாடம் அக்கப்போர்கள் நடக்க, அது ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் சென்று சேர்ந்தது. அரசல், புரசலா ஏன் கேட்குறீங்க நானே சொல்கிறேன் என்று நேராக ஜெ. சமாதிக்கு சென்று தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓபிஎஸ். அதை யாரும் மறக்கவே முடியாது.

கூவத்தூர் களேபரங்கள்

அதன்பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்ற பிரச்னைகள் எழ, கூவத்தூர் களேபரங்கள் அரங்கேற, இபிஎஸ்-க்கு முடிசூடிவிட்டு சசிகலா சபதம் செய்து சிறை செல்ல, அதிகாரப் போட்டி ஓபிஎஸ் vs இபிஎஸ் என்று மாறியது. கொஞ்ச காலம் சசிகலா விசுவாசியாக இருந்த இபிஎஸ் ‘அட சிறை சென்றவருக்கு எதற்கு அதிகாரத்தை கொடுப்பானேன்... நாமே எடுத்துக்கலாம்’ என்று ஓபிஎஸ் விதித்த சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் விசாரிக்கிறோம் என்று சொல்லி ஓபிஎஸ்-ஸுடம் இணைந்த கைகள் போஸ் கொடுத்தார்.

2017 ஆகஸ்ட்டில் இது நடந்தது. ‘தாய் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே...’ என்று குடும்பப் பாடலெல்லாம் பாடும் அளவுக்கு ஒற்றுமை காட்டினர்.

எடப்பாடி - பன்னீர்

அதன்பின்னர் ஒரு சம்பவம் நடந்தது.

ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் இணைந்த கைகள் பவரை காட்ட ஓபிஎஸ், இபிஎஸ் களமிறங்கியிருக்க, ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குடும்பத்தின் சதி இருப்பதாகச் சொல்லியவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி இறக்கப்பட்டிருந்தார் டிடிவி தினகரன். அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேச்சையாக டிடிவி, திமுக சார்பில் மருது கணேஷ் களமிறக்கப்பட்டிருந்தனர்.

அப்போதுதான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.வான வெற்றிவேல் (தினகரன் ஆதரவாளர் ) ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா இட்லியும், சட்னியும் எல்லாம் சாப்பிடவில்லை. அவர் எப்போதும் கோமாவில் தான் இருந்தார். அம்மா மரணத்தின் பின்னணியில் நிச்சயமாக சசிகலா குடும்பம் இல்லவே இல்லை என்று வாதங்களை முன்வைத்தார்.

“ஐயோ பழிபோட்டுவிட்டோமே” என்று பதறிப்போன எமோஷனல் வாக்காளர்களும், அட 20 ரூபாய் டோக்கனும், அதனை மாற்றும்போது நிறைய பரிசும் உண்டாமே என்ற ‘கையில காசு வாயில தோசை’ ரக வாக்காளர்களும் குத்துங்க எஜமான் என்று குத்திவைக்க குக்கர் விசில் சட்டப்பேரவைக்குள் கேட்டது. ஜெ. தொகுதியில் அவர் கட்சி வேட்பாளர் வீழ்த்தப்பட்டு, ஜெ.வை விட அதிக வாக்குகள் பெற்று ஒரு சுயேச்சை வெற்றி பெற்றார்.

11 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றார் என்ற வரலாறு உருவானது. முன்னதாக, 2006-ம் ஆண்டு தளி சட்டமன்ற தொகுதியில் ராமச்சந்திரன் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றிருந்தார். அதற்கு பின் 2017 ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றிருந்தார்.

டிடிவி வெற்றியால், சசிகலா சிறையில் இருந்து திரும்பியதும் அதிமுக மீண்டும் சசிகலா கைக்கு செல்லும் என்று டிவி ஷோக்களில் விவாதம் நடைபெற, டிடிவி வெற்றியும், அதன் பிந்தைய சலசலப்புகளும் இபிஎஸ் - ஓபிஎஸ் காம்போவுக்கு பெரிய பின்னடைவானது.

ஆனால், இதெல்லாம் பெருசல்ல என்பதுபோல் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தாங்கள் உருவாக்கிய புதிய பதவிகளில் ஓபிஎஸ், இபிஎஸ் லயித்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் யாரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று அவர்கள் காட்டிய தாராளம், பெருந்தன்மை பேசுபொருளானதும் நினைவுகூரத்தக்கது.

அ.தி.மு.க -பன்னீர் - எடப்பாடி

பாஜகவிடம் அடகு..!

இணைந்த கைகள் நாங்கள் என்று அவர்கள் சொன்னாலும் கூட கட்சிக்குள் கோஷ்டி பிளவு பெருகிக் கொண்டே தான் இருந்தது. இதையெல்லாம் டெல்லியில் இருந்து உற்று நோக்கிய பாஜக, சந்தில் சிந்து போடலாம் என்று காய்களை நகர்த்தியது. அப்போதிருந்தே அதிமுகவை பாஜகவிடம் அடகுவைக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

எஞ்சிய 4 ஆண்டு காலமும் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சவால் விட்டுக் கொண்டே இபிஎஸ், ஓபிஎஸ் நடத்திய அத்தனை அரசியல் நகர்வுகளையும் தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

அதிமுகவின் கடைசி ஓராண்டில் கொரோனா பெருந்தொற்றும் கும்மியடிக்க, 4 ஆண்டு காலத்தில் கட்சிக்காக சண்டை போட்டுக் கொண்டவர்கள் பெருந்தொற்றிலிருந்து மீண்டு நமக்கென்ன செய்யப் போகிறார்கள் என்று கொரோனா நிவாரணத் தொகை, பொங்கல் இனாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ஓட்டை திமுகவுக்கு போட்டார்கள். ஆக, ஜெயலலிதா இல்லாத இடத்தை அழகாக தகவமைத்து சிந்தாமல், சிதறாமல் வெற்றியை கட்டியெழுப்பியருக்க வேண்டியதை கோட்டை விட்டது அதிமுக.

கேப்பில் கிடாய் வெட்டுவது போல், ஆர்கே நகரில், மக்கள் அனுதாபத்தை சரியாக அறுவடை செய்து கொண்டு சட்டப்பேரவையில் ஒரு ஷார்ட் டெர்ம் சகாப்தம் எழுதிக் கொண்டவர் என்னவோ டிடிவி தினகரன் தான். அன்று கோட்டை விட்ட அதிமுக இன்று கோட்டையப் பிடிக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது.

கருணாநிதி மறைவும், அரசியல் வெற்றிடமும்:

தமிழகம் ஜெயலலிதாவை 2016-ல் இழந்திருக்க, 2018 ஆகஸ்ட் 7-ல் கருணாநிதியை இழந்தது. இது தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. டெல்லியில் இருந்து தமிழகத்தை குறிவைத்த பாஜகவுக்கோ ‘திண்ணை காலி’ என்ற மகிழ்ச்சியைத் தந்தது.

ஆனால், அவ்வளவு மகிழ்ச்சியடைந்து விட வேண்டாம் என்று, கருணாநிதி உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய நாளிலிருந்தே டெல்லிக்கு ஒரு செக் வைத்துக் கொண்டுதான் இருந்தார் ஸ்டாலின்.

அதற்கு முன்பு, திமுகவில் செயல் தலைவர் பதவி இல்லாத நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் பிப்ரவரி 2017-ல் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்ல தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது நிகழ்ந்த அமளி, துமளி அத்தனை லேசில் மறக்கமுடியாதது.

சட்டப்பேரவையில் இருந்து கிழிந்த சட்டையுடம் ஸ்டாலின் வெளியே வந்த காட்சிகள் நேஷனல் மீடியாவிலும் ஃப்ளாஷ் ஆனது. அத்துடன் நில்லாமல், அதே கிழிந்த சட்டையுடன் ஆளுநர் மாளிகை வரை சென்று முறையிட்டும் வந்தார்.

கருணாநிதி மறைவு

கருணாநிதிக்கு ஆண் வாரிசாக நால்வர் என்றாலும் இருவர் தான் அரசியலில் தீவிரம் காட்டினர். தலைநகரில் எப்போதும் தந்தைக்குப் பின்னால் கைகட்டிய தனயனாக ஸ்டாலின் திகழ, மதுரையில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களில் பவர் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருந்தார் மு.க.அழகிரி. கருணாநிதியும் அவரை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

ஆனால், கருணாநிதி ஸ்கூல் ஆஃப் பாலிடிக்ஸில் அழகிரியை விட ஸ்டாலின் தான் மிக நேர்த்தியாக பொருந்தி வந்தார். அதை கருணாநிதியும் உணர்ந்திருந்தார். அதனால் தான் கட்சியிலிருந்து அழகிரியை நீக்குவது வரை நடவடிக்கைகளை எடுக்க அவர் தயங்கியதே இல்லை. அது மட்டுமல்லாது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலையில்தான் தன் ஒப்புதலோடு செயல் தலைவர் பதவிக்கு ஒப்புக் கொண்டார்.

1970-களில், மிசா அவசரச் சட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறை சென்றதிலிருந்து, சென்னை மேயராக கருணாநிதியிடம் கற்றுக் கொண்ட அரசியல் வழியில் தனித்து நின்றது வரையிலும், அமைச்சராக, துணை முதல்வராக தன் கடமைகளை அப்பா தானே முதல்வரென்று ஆடாமல் அடக்கத்துடன் செய்ததிலும், பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சோபித்ததிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தார் ஸ்டாலின் எனலாம்.

நமக்கு நாமே என்று ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணம், கருணாநிதியால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. கட்சியினராலும் வரவேற்கப்பட்டது.

கருணாநிதி வாழ்ந்த காலத்தில் எல்லாம் அவருக்கு அழகிரி ஒரு குடைச்சல் என்றே விமர்சிக்கப்பட்டதாலும், கட்சியின் மூத்தோரை எல்லாம் சரமாரியாக விமர்சிக்கும் போக்கினாலும் அவருக்கு எதிர்ப்பும், எலோரிடமும் பாங்காகப் பேசும் பொறுப்பினாலும், குணத்தினாலும் ஸ்டாலினுக்கு ஆதரவும் திமுகவுக்குள் இயல்பாகவே உருவாகியிருந்தது.

திமுக கட்சியில் இருந்த அந்த அனுதாபம் திமுக அனுதாபிகள் தாண்டி தமிழக மக்களுக்கும் பாய்ந்து கொண்டிருந்தது. அதிமுக போட்டுக் கொண்டிருந்த கொட்டங்களுக்கு நடுவே, ஸ்டாலின் திமுகவை வலுவாகக் கட்டமைத்துக் கொண்டே இருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7, 2018-ல் மறைய, அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டது. அப்போது அந்த சூழ்நிலையை ஸ்டாலின் நீதிமன்றம் மூலம் லாவகமாக அணுகி இடத்தைப் பெற்றதும், அந்த அறிவிப்பு வந்தவுடன் அதனை தனது தந்தையின் முக்கிய மூத்த அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்ட பரிவும் அவரை பளிச்சிடச் செய்தது.

ஸ்டாலின் - கருணாநிதி

ஆகஸ்ட் 28, 2018 - திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின். அடுத்து 2021 தேர்தலைக் குறிவைத்து அவர் தனது செயல்களைத் தீவிரப்படுத்தினார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலும் வந்தது. மேடைப் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், இணையவழி பிரச்சாரங்கள் என்று அனைத்திலும் தீவிரம் காட்டினார் ஸ்டாலின்.

ஒற்றுமையில்லாத கட்சி, டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கும் கட்சி எப்படி தமிழகத்தில் நிலையான ஆட்சியைத் தரும் என்ற கேள்வியை செல்லுமிடமெல்லாம் எடுத்து வைத்தார் ஸ்டாலின். அதற்கு பலன் கிடைத்தது.

அரசியலில் அனுதாப அலைகள் பலவகை, அதில் நான் எதிர்கொண்டது புதிய வகை என்று சொல்லும் அளவுக்கு அதை அழகாக மெட்டீரியலைஸ் செய்து வெற்றி பெற்று கோட்டைக்குச் சென்றவர்தான் ஸ்டாலின்.!

(தொடரும்)

மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம்

வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட். அன்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவார்... அறிவிப்பார். இந்தியாவில் வலு... மேலும் பார்க்க

``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மகாரஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரீஷ் மகாஜன் உரையாற்றினார். அந்த உரையில், குடியரசுத் தினத்... மேலும் பார்க்க

பட்ஜெட் 2026: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்! | Live

ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சசி தரூர்!சசி தரூர்பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்டக் குழுக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் ... மேலும் பார்க்க

தமிழக ஊர்ப்பெயர்களில் 'ஹள்ளி' இணைக்கப்பட்ட விவகாரம்; ஜி.கே.மணியின் கோரிக்கைக்கு அரசின் பதில் என்ன?

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஊர்களின் பெயர்களில் ஹள்ளி என்று இருப்பதை மாற்ற வேண்டும் என்று பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி வைத்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதுகுறித்து பரிசீலித்து ந... மேலும் பார்க்க