`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் வி...
``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்!
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மகாரஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரீஷ் மகாஜன் உரையாற்றினார். அந்த உரையில், குடியரசுத் தினத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பெயரையெல்லாம் குறிப்பிட்டு பேசியவர், டாக்டர் அம்பேத்கர் பெயரைமட்டும் குறிப்பிடவில்லை. அவரின் உரை முடிவை எட்டும்போது, அந்த சபையில் இருந்த வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், அப்போதே ஆட்சேபனை தெரிவித்தார்.
அதனால் அந்த இடம் சலசலப்பானது. அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரீஷ் மகாஜன், ``அம்பேத்கர் பெயரை உரையில் குறிப்பிடாமல் இருந்தது தற்செயலானது. எந்த திட்டமும் இல்லை. என் செயல் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என விளக்கமளித்திருந்தார்.

இது குறித்து வனத்துறை ஊழியர் மாதவி ஜாதவ், ``பி.ஆர்.அம்பேத்கர் பற்றிய குறிப்பைத் தவிர்த்தது தற்செயலானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் சத்ரபதி சிவாஜி மகாராஜ், சம்பாஜி மகாராஜ் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பின் தந்தையைப் பற்றிய குறிப்பை வசதியாகத் தவிர்த்திருக்கிறார். இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பது கிரீஷ் மகாஜனின் அதிர்ஷ்டம். அது என் துரதிர்ஷ்டம். கிரீஷ் மகாஜன் பாபாசாகேப் அம்பேத்கரின் அனைத்துப் பின்பற்றுபவர்களிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கிரீஷ் மகாஜன் மீது பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி, நாசிக்கில் உள்ள சர்க்கார்வாடா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று கிரீஷ் மகாஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` என் உரையில் பி.ஆர்.அம்பேத்கரைக் குறிப்பிடாததற்கு வருந்துகிறேன். இதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. யார் வேண்டுமானாலும் எந்தக் கோரிக்கையையும் வைக்கலாம். நான் நேற்றும் இதைத் தெளிவுபடுத்தினேன். என் உரைக்குப் பிறகுதான் இந்த குழப்பம் பற்றி எனக்குத் தெரியவந்தது. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. பாரத ரத்னா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தச் சம்பவத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.













