வார ராசிபலன் 7.6.26 முதல் 13.6.26 | Vaara Rasi Palan | Bharathi Sridhar | Weekly...
`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ - சி.பி.ஐ., முத்தரசன்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் தொடங்கி வைத்தார். அதன்பின் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது , “ இந்தியா கூட்டணி, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்டது.
இதில் தலைமை வகிக்கிற காங்கிரஸ் கட்சி மற்ற இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அந்த கட்சிக்கு உண்டு. அவர்கள் போனால் இவர்கள் வருவார்கள் என பேசுவது இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கும் அதை பலப்படுத்துவதற்கும் பயன்படாது.
இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்குண்டான அணுகுமுறைகளை காங்கிரஸ் கட்சி தான் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு, “கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்கட்சியிலிருக்கிற முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது அமலாக்கதுறை வழக்கு போடுவார்கள்.
யார் மீது வழக்கு போட்டார்களோ அவர்கள் பா.ஜ.க -வில் சேர்ந்தால் தூய்மையானவர்களாக மாறிவிடுவார்கள். அதே போன்ற அரசியல் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதும் அது தான் தொடர்கிறது" என்றார்.
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, ``இப்போது தான் குழந்தை பிறந்திருக்கிறது. இன்னும் தொப்புள் கொடி அறுக்காத குழந்தை; வளரட்டும். அதன் பின் தேறுமா? தேறாதா? என முடிவெடுக்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம்"

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் கம்யூனிச சித்தாந்தத்தில் வருகிறதா? என கேட்டதற்கு, ``கொள்கை கோட்பாடு எல்லாம் ஒன்றும் இல்லை. த.வெக. 108 இடங்களில் வென்று 107 உறுப்பினர்களை கொண்டிருந்தது. ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை த.வெ.க மட்டுமே கொண்டிருந்தது.
அவர்கள் ஆட்சியமைப்பதற்கு கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்கள். கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இதற்கு முன் எப்படி சசிகலா ஆட்சியமைக்க கடிதம் கொடுத்தும், அதை காலம் தாழ்த்தி, நீதிமன்ற தீர்ப்பை விரைவுபடுத்தி, வேறொரு ஆட்சியை அமைத்தார்களோ, அது மாதிரியான ஒரு ஆட்சி அமையக் கூடாது என்பதற்காகவும், கவர்னர் ஆட்சி மூலம் மறைமுகமாக பா.ஜ.க ஆள முயற்சி செய்ததை முறியடிப்பதற்காகவுமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறோம்” என்றார்.













