திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!
"தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும்; தேசிய கீதம் பாடுவதில் முரண் கிடையாது!" - ராஜ்மோகன்
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது.
இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் பயிற்சி முகாமை முடித்துவிட்டு, இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் எப்படி பதிலளிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இன்றைய அமர்வு முடிந்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.

அவர் பேசுகையில், "இளைஞர்கள் அதிகமாகக் கலந்துகொண்ட சட்டமன்றம் இது. பிரதிநிதித்துவம் சமமாக மாறியிருக்கிற சமூக நீதிமன்றமாக மாறியிருக்கும் சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கியிருக்கிறது.
தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் வாழ்வு, அன்று இன்றும் என்றும் தமிழுக்குத்தான் முன்னுரிமை.
ஒன்றிய அரசு கொடுத்திருக்கும் சுற்றறிக்கையில் முதலில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்பது இருந்தது. தமிழக அரசைப் பொறுத்தவரையில், தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும்.
மற்றபடி தேசிய கீதம் பாடுவதில் முரண் கிடையாது. தேசிய கீதம் பாடக்கூடாதென்று கிடையாது. தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
சட்டமன்றத்திற்கெனக் கண்ணியமும் மாண்பும் இருக்கின்றன. ஜனநாயகப்பூர்வமாக எதிர்க்கட்சியினர் அவர்களின் எதிர்கருத்துகளைச் சொல்லலாம். இந்த ஆட்சி பொது அமைதியையும், சட்ட ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காகச் சிங்கப்பெண் சிறப்புப்படை என்பதைக் கொண்டு வந்திருக்கிறது இந்தச் சர்க்கார். தொடக்கம் நல்ல முழக்கமாக இருந்திருக்கிறது" என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "2024-இல், சராசரியாக ஒரு நாளைக்கு 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
அதைவிட இப்போது குறைந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் இப்போது வெளியே வந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பாதுகாப்பு உணர்வு அதிகரித்திருப்பதால் பாதிக்கப்படுவோர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த ஆட்சி பொது அமைதியைப் பாதுகாத்து, துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே வலியுறுத்தி வருகிறோம்.
மத்திய அரசு இதை நடத்த வேண்டும் என அழுத்தமும் கொடுப்போம். இரண்டு மூன்றாண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரலை மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டமன்ற நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு" எனக் கூறியிருக்கிறார்.



















