China Vs Taiwan War: India பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? | Silver | IP...
திண்டுக்கல்: பிரபல நகைக்கடையில் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகளை திருடிய ஊழியர்கள்!
திண்டுக்கல்லில் ஸ்ரீ வாசவி தங்க மாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு தணிக்கையாளராக வைஷ்ணவி இருந்து வந்துள்ளார். இவர், கடந்த 02.12.2025ஆம் தேதி தரைத்தளத்தில் உள்ள தங்க நகை (Short Necklace) பிரிவில் உள்ள நகைகளை தணிக்கை செய்ததில் 1010.500 கிராம் எடையுள்ள 45 எண்ணங்கள் (தங்க நகைகள் மதிப்பு ரூ.1,43,23,022) குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக நகை கடையின் துணைப் பொது மேலாளர் ரேணுகேசனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
நகை மதிப்பு குறைவாக உள்ளதாக சொல்லபட்ட அந்த தளத்தில் பாலசுப்பிரமணியன், சிவா, கார்த்திக், விநாயகன், செல்வராஜ், ரெங்கநாயகி, ஆனந்த ஜோதி, ஆனந்தன் ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இதில், ஷார்ட் நெக்லஸ் பிரிவின் மேலாளராக பாலசுப்ரமணியன் உள்ளார். அவருக்கு கீழ் அந்தப் பிரிவில் சிவா என்பவர் தலைமை விற்பனை பணியாளராக வேலை செய்து வருகிறார். மேலாளர் பாலசுப்பிரமணியன் இல்லாத நேரத்தில் சிவா மேலாளர் பொறுப்பை கவனித்து வந்துள்ளார்.

இதனை அடுத்து நகை கடையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களிடமும் துணை பொது மேலாளர் விசாரித்த போது, கடந்த 05.09.2025 மற்றும் 14.11.2025 தேதிகளில் பாலசுப்பிரமணியன் விடுப்பு எடுத்துள்ளார். அந்த சமயத்தில் வேலைக்கு வந்த சிவா 7 ஷார்ட் நெக்லஸ் தங்க நகைகளை எடுத்துள்ளது தெரிய வந்தது.
மேலும் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த தினங்களில் எல்லாம் சிவா தங்க நகைகளை எடுத்து நகை மதிப்பீட்டடாளர் செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார் கார்த்திக் மற்றும் விற்பனையாளர் விநாயகன் உதவியுடன் டேமேஜ் என காண்பித்து நகையை விற்று பணத்தை பங்கு போட்டுக் கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஸ்ரீ வாசவி தங்க நகை கடை துணை பொது மேலாளர் ரேணுகேசன் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமை விற்பனையாளர் சிவா, நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார் கார்த்திக் மற்றும் விற்பனையாளர் விநாயகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், இது குறித்து விசாரணை செய்த திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவா, விநாயகம் மற்றும் கார்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.



















