நான் contestantஆக இருக்கும்போது இவர்கிட்ட award வாங்கியிருக்கேன்.! - Saregamapa|...
DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கிவிட்டன.
தமிழக தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என கட்சிகள் தனித்தனியே வியூகங்களை வகுத்து வருகின்றன.

தேர்தல் கூட்டணி
இதில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. திமுகவில் உள்ள தோழமைக் கட்சிகள் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.
ஆனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது.
கடந்த மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒரு சீட் வேண்டும் என்று அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், அதிமுக, தேமுதிக கேட்ட சீட்டை கொடுக்க மறுத்து விட்டது.
தேமுதிகவின் நிலைப்பாடு என்ன?
இதனால், அதிமுக மீது தேமுதிகவுக்கு அதிருப்தி நிலவி வந்தநிலையில் ஸ்டாலினை, பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தது, நேற்றைய தினம் (டிச.28) விஜயகாந்தின் 2- ஆம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டது என திமுகவுடன், தேமுதிக நெருங்கி செல்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
அதேசமயம் நேற்று விஜயகாந்த் குருபூஜையில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஆளும் கட்சியை எதிர்க்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பேசியிருந்தனர்.

விஜய்யும் மதுரை மாநாட்டில் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார். நினைவு நாளான நேற்று விஜயகாந்த் குறித்து பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.
இப்படி கட்சிகள் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் நிலையில் கூட்டணி குறித்து ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்று பிரேமலதா சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
தேமுதிக குறித்து பேசிய அவர், " இன்றைய தேதியில் தேமுதிக மூன்று கட்சிகளின் கூட்டணி கதவைத் தட்டியிருக்கிறது.
அதாவது திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி மற்றும் தவெக கதவைத் தட்டியிருக்கிறது.
தேமுதிகவை பொறுத்தவரை அதிமுக - பாஜக கூட்டணியைத் தான் விரும்புவார்கள்.
அந்தக் கூட்டணியில் தான் அவர்கள் கேட்கும் சீட்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி தொகுதி செலவு போன்ற விஷயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும்.

திமுக கூட்டணி
தவெகவுடன் கூட்டணி வைத்தால் அதிக அளவில் சீட்டுகள் கிடைக்கும் ஆனால் தவெக கூட்டணி வெற்றி பெறுமா? என்று தெரியாது.
அதனால் தேமுதிகவின் கடைசி சாய்ஸ் ஆகத்தான் தவெக இருக்கும்.
திமுக கூட்டணிக்கு சென்றார்கள் என்றால் அங்கு குறைவான சீட்டுகள் தான் கிடைக்கும். ஆனால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
அதிமுக- பாஜக கூட்டணிக்கு சென்றால் 10 சீட்டுகள் கொடுத்தால் அதில் இரண்டு சீட்டுகள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து தேமுதிக கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது.
அதிமுக- பாஜக கூட்டணி எப்படியாவது தேமுதிகவை பிடித்து வலையில் போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
அதேபோல திமுகவின் நோக்கம் என்னவாக இருக்கும் என்றால் அதிமுக-பாஜக கூட்டணியில் மற்ற கட்சிகள் சேரக் கூடாது.
அந்தக் கூட்டணி பலவீனமாக இருக்க வேண்டும் என்று எண்ணி அங்கிருந்து ஆட்களை எப்படி பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதிமுக - பாஜக கூட்டணி
அந்தவகையில் தேமுதிகவை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று திமுக எண்ணுகிறது.
ஆனால் தேமுதிக எதிர்பார்க்கின்ற சீட்டை திமுகவால் தர முடியாது. ஏனென்றால் திமுக கூட்டணியில் ஏற்கனவே கட்சிகள் அதிகமாக இருக்கின்றன.
அதனால் அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிக இணையத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.
அங்கு அதிகமான இடம் கிடைக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவார்களா? என்பது சந்தேகம் தான்" என்று தெரிவித்தார்.














