DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?
`இரவில் பயத்தில் வாழ்கிறோம்' - ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த 19 மாணவிகள்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்வதாக நிர்வாகத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இரவு நேரத்தில் அதிக அளவில் ராகிங் நடப்பதாக மர்ம புகார் வந்தது.
அந்த புகாரில், முதலாம் ஆண்டு மாணவிகள் கடந்த 20 நாட்களாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். நாங்கள் பயமான சூழ்நிலையில் வசித்து வருகிறோம். இரவில்தான் ராகிங் நடக்கிறது.

இது குறித்து நிர்வாகத்திடம் புகார் செய்தாலும் கண்டுகொள்வதில்லை''என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணையில் பெரும்பாலான முதலாம் ஆண்டு மாணவிகள் ராகிங் தொல்லைக்கு ஆளானதாகவும், அறிமுகம் என்ற பெயரில் இத்துன்புறுத்தல் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
அதோடு இது போன்ற செயலில் ஈடுபட்ட 19 மாணவிகளையும் முதலாம் ஆண்டு மாணவிகள் அடையாளம் காட்டினர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 19 மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த 3 மாதத்திற்கு விடுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கல்லூரி கிளாஸில் பங்கேற்க முடியும். எதிர்காலத்தில் இதுபோன்று நடந்தால் சஸ்பெண்ட், கல்லூரியில் இருந்து நீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள விடுதி நிர்வாகம், மாணவிகளிடம் இதுதொடர்பாக எழுதி வாங்கிக்கொண்டுள்ளது.
இது குறித்து அரசு ஆயுர்வேதக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் ராஜேந்திர சோனேகர் கூறுகையில், "ராகிங் குறித்த தகவல் கிடைத்ததும், நாங்கள் ராகிங் தடுப்புக் குழுவை அமைத்தோம், அதில் ஜூனியர் மற்றும் சீனியர் மாணவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, 19 மாணவிகள் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. அவர்கள் விடுதியிலிருந்து 3 மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளனர். இந்தத் துன்புறுத்தலில், சீனியர்கள் முன் ஜூனியர்கள் தலைகுனிந்து மணிக்கணக்கில் நிற்க வைக்கப்படுகின்றனர். அறிமுகம் என்ற பெயரில் நடக்கும் இச்செயல் மணிக்கணக்கில் நீளும். அதில் உடல்ரீதியான துன்புறுத்தல் எதுவும் இல்லை."என்று தெரிவித்தார்.

















