கோயம்பேடு சந்தையில் குவிந்த கரும்பு, மஞ்சள் - உற்சாகமாக வாங்கிச் செல்லும் மக்கள்...
`தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!' - எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்
சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் கண்காட்சி, ஆண்டுதோறும் வாசகர்களை மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் என பல தரப்பினரையும் ஒரே இடத்தில் இணைக்கும் அறிவுத் திருவிழாவாக தொடர்கிறது.
நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என களைகட்டும் இந்த புத்தகக் கண்காட்சியில், அனைத்து வயதினரும் வாசிப்பை நோக்கி திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இந்தச் சூழலில், புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனிடம், இன்றைய தலைமுறையினரின் வாசிப்பு நிலை குறித்து பேசினோம்...
வாசிப்பு கூடியிருக்கிறது
“எல்லா தலைமுறையிலுமே எல்லாரும் வாசிக்க மாட்டார்கள். சிலருக்கு மட்டுமே வரலாறு பற்றி, தத்துவம் பற்றி, ஆராய்ச்சி பற்றி ஒரு தேடல் இருக்கும். அவர்கள் மட்டுமே வாசிப்பார்கள். கடந்த தலைமுறையில் அத்தகைய தேடல் உள்ளவர்கள் பொருளாதார காரணங்களால் புத்தகங்களை வாங்கிப் படிப்பது மிகவும் குறைவு.

இந்த தலைமுறையில் மக்கள் புத்தகங்களை வாங்குவதும், புத்தகங்கள் வெளிவருவதும் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். கடந்த தலைமுறையை விட வாசிப்பு கூடியிருக்கிறது. பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பொழுதுபோக்கை தேடுபவர்கள் திரைப்படங்கள் போன்றவற்றை பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் தேடல் உள்ள தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புத்தகக் கண்காட்சியை பார்த்தாலே அது தெரியும். ஒரு இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்த அளவில் புத்தகக் கண்காட்சி நடத்துவது சாத்தியமில்லை. இவ்வளவு வாசகர்கள் வருவார்களா என்பதே கேள்விக்குறி. ஆனால் தீவிர வாசிப்பு என்பது உலகம் முழுக்க எப்போதுமே இருக்கும்,” என்றார்.
அவரின் புத்தகப் பரிந்துரைகள் குறித்து கேட்டபோது, தாம் வாசித்ததில் தனக்கு பிடித்த சில புத்தகங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் – தூக்கு செல்வம், கிழக்கு பதிப்பகம்
யானைடாக்டர் கே – சந்துரு, கிழக்கு பதிப்பகம்
குருதிவழி – சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம்
மணிப்பல்லவம் – வாசு முருகவேல், நீளம் பதிப்பகம்
ஆசிர்வாதம் ஸ்டுடியோஸ் – அஜிதன், விஷ்ணுபுரம் பதிப்பகம்.!



















