தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில்களை நீட்டிக்க கோரிக்கை
தூத்துக்குடி - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களை நீட்டிக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கச் செயலா் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: தூத்துக்குடி - தாம்பரம் ரயிலை திங்கள்தோறும் தூத்துக்குடி -தாம்பரம் இடையேயும், செவ்வாய்தோறும் தாம்பரம் -தூத்துக்குடி இடையேயும் பொங்கல் பண்டிகை வரை இயக்க வேண்டும்.
தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு காலை நேரங்களில் நேரடி ரயில் கிடையாது. திருநெல்வேலி- தூத்துக்குடி பயணிகள் ரயில் காலை 9.30 முதல் மாலை 6.25 மணிவரை தூத்துக்குடியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ரயிலின் பெட்டிகளை வைத்து தூத்துக்குடி-மதுரை இடையே காலை, மதிய நேரங்களில் சிறப்பு ரயிலாக இயக்கினால் பொதுமக்கள் பயனடைவா். இல்லையெனில், திருநெல்வேலி- தென்காசி- செங்கோட்டைக்கு வாஞ்சி மணியாச்சி புறவழியாக சிறப்பு ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.