`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?' கவுன்...
தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்
சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால்
செல்வத்தை இழந்தவர்கள், மீண்டும் அதை அடைவார்கள். பொன் - பொருள் மட்டுமல்ல, பிரிந்த உறவுகளை மீண்டும் அடையவும் பாலாம்பிகை அருள்பாலிப்பாள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட அருள் தரும் அன்னையாக அம்பிகை அமர்ந்திருக்கும் திருத்தலம்தான் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை ஆலயம்.
திருச்செந்தூரிலிருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில், சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை கோயில் என்னும் ஞானியார் மடம் ஸ்ரீவாலைகுருசுவாமி திருக்கோயில்.

சித்தர்களுக்குத் தலைவியாக விளங்கி அவர்களுக்குச் சகல ஸித்திகளையும் அருளும் தேவியான ஸ்ரீவாலைதேவி வழிபாட்டை நந்தீசரிடம் இருந்து போகர் அறிந்ததாகவும், போகர் கொங்கணருக்கு உபதேசித்ததாகவும், கொங்கணர் பிற்கால சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அன்னை வாலையை, ‘ஐம் கிலிம் ஸெள’ என்ற வாலாம்பிகை மந்திரம் கொண்டு துதித்து அஷ்டமா ஸித்திகளையும் அடைந்தனர் சித்தர்கள்.
ஸ்ரீவித்தையில் எளிதானது வாலை மந்திரம் என்கிறது சித்தர்கள் சுவடி. திருமூலரும், கருவூராரும், அபிராமிப் பட்டரும் இந்த அன்னையின் பெருமையைப் பலவாறு புகழ்ந்துள்ளனர்.
கலியுகத்தில் பாலா
கலியுகத்தில் அன்னை பாலாவே குமரகுருபரருக்குக் குழந்தை வடிவில் காட்சி தந்து, அவர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழைக் கேட்டு மகிழ்ந்து, முத்து மாலையைப் பரிசளித்த அற்புதக் கதையும் உண்டு.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் `வாலை குரு' என்ற சித்தர் தம்முடைய சீடர் காசியானந்தருடன் காசியில் இருந்து புறப்பட்டு, கொம்மடிக்கோட்டைக்கு வந்தார். இந்த இடத்தில் சாந்நித்யம் அறிந்து, இங்கேயே ஆசிரமம் அமைத்து, ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்துத் தவம் இயற்றி, ஸித்திகள் பெற்றார்.
ஸ்ரீபாலாவின் அருளால் அவளைக் கனவில் கண்டு பலரின் குறைகளைத் தீர்த்தார். பிறகு இங்கேயே இருவரும் ஜீவசமாதி அடைந்தனர். அவர்களுக்கு அருள் செய்த அன்னை பாலா இங்கேயே அமர்ந்தும்விட்டாள். எனவே கொம்மடிக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் தலத்துக்கு ‘பாலா க்ஷேத்திரம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

கொம்மடிக்கோட்டை கோயிலில் ஒரே சந்நிதியில் வாலை சித்தரும், காசியானந்தரும் அடுத்தடுத்து அருள்கின்றனர். இங்குள்ள ஸ்ரீவாலைசித்தர், ஸ்ரீகாசியானந்தர் இருவரையும் வணங்கிய பின்னரே, ஸ்ரீவாலையை வழிபட வேண்டும் என்பது மரபு.
வாலை சாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்தியெம்பெருமான் காட்சியளிக்கிறார். சித்தர்கள் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சந்நிதி உள்ளது. சக்தியின் உயர்ந்த நிலை மனோன்மணி. மன இருளை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் மனோன்மணி.
மனதில் மணியாக ஒளிர்பவள். ஆலயத்தின் பின்புறம், கன்னி விநாயகரும் பால முருகனும், சண்டிகேஸ்வரரும், நடராஜர்–சிவகாமி சந்நிதியும் உள்ளன.
ஸ்ரீவாலாம்பிகை சந்நிதி தனி விமானத்துடன் அமைந்துள்ளது. பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ அலங்காரங்களுடன், நின்ற கோலத்தில் ஜொலிஜொலிக்க அருள்பாலிக் கிறாள் ஸ்ரீபாலா. `இந்த அன்னையை வணங்கினால் சகல யோகங்களையும் போகங்களையும் அருள்வாள். ஒரு கணம் அவளை எண்ணி வணங்க, கனவில் வந்து கரம் கொடுப்பாள்' என்கின்றன சாஸ்திரங்கள்.
மனமுருக வேண்ட மனக்கவலை தீர்ப்பாள்
குறிப்பாக பொன், பொருள், உறவுகள், தேகநலன், மன நிம்மதி என்று எதை இழந்து தவித்தாலும், தன்னருளால் அந்தத் தவிப்பைப் போக்கி இழந்தவற்றையும் மீட்டுத் தருபவள் இந்த அன்னை. மட்டுமன்றி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், கெட்ட கனவுகளால் அச்சம் கொள்பவர்கள், வம்பு வழக்குகளால் துன்பம் கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிவருகிறாள் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை.
ஸ்ரீபாலாவுக்கு வலப்புறம் வாராகி சந்நிதி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார். கோயிலின் தல விருட்சம் மஞ்சனத்தி மரம். இந்த மரத்தின் அடியில்தான் வாலை சித்தரும், காசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி அருள் தருகிறார்.
இந்த ஆலயத்தின் பெரும் விசேஷம் இங்கு அளிக்கப்படும் திருமாத்திரை. வாலை சித்தர் அன்று அளித்த அதே முறைப்படியே இன்றும் இங்கே திருமாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

மருந்தாகும் மஞ்சனத்தி
இந்தக் கோயிலில் உள்ள மஞ்சனத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஒரு பங்கு சேர்த்து, கோயிலில் உள்ள அம்மியில் அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, கோயில் மண் சிறிது சேர்த்து அரைத்து, அதை 41 சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, அக - புற நோய்களுக்கு அருமருந்தாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாலைசித்தருக்கும், காசியானந்த சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றி பெறும், வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பதும் ஐதிகம்.
ஸ்ரீவாலையை உபாசிக்க வாழ்நாள் நீடிக்கும். வாய்ப்பிருப்பவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று சித்தர் பெருமக்களையும் ஸ்ரீவாலாம் பிகையையும் வழிபட்டு வாருங்கள்; குருவருளாலும் அம்பிகையின் திருவருளாலும் வளமான வாழ்வை வரமாகப் பெறுவீர்கள்.




















