தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அர...
தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!
தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.










.jpeg)







.jpeg)


