AI மூலம் ஆடம்பரம்... உயிருக்கே விலைபேசிய நண்பன்! - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நடந்த வ...
தென்காசி: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு- தமிழக தொல்லியலில் மைல்கல்
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே காரிச்சாத்தான் ஊராட்சிக்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமம், தமிழர்களின் தொன்மை நாகரிக வரலாற்றை உலகிற்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்கும் வகையில் முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானத்துடன் கூடிய சதுர வடிவ படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழாய்வு வைப்பாறு ஆற்றின் வலது கரைப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 1930-ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆங்கிலேய அதிகாரியால் ரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், மதுரையிலிருந்து செங்கோட்டை கணவாய் வழியாக மேற்குக் கடற்கரைக்குச் சென்ற பண்டைய வர்த்தகப் பாதையில் இந்தப் பகுதி அமைந்திருந்ததால், சங்ககாலத்தில் இது முக்கிய வணிகத் தளமாக விளங்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அகழாய்வில் இதுவரை வாழ்விடப் பகுதியும், ஈமப்பகுதியும் கண்டறியப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் மொத்தம் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் சான்றுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானம், கீழடி, அரிக்கமேடு, பட்டறைபெரும்புதூர், காவேரிப்பூம்பட்டினம், அழகன்குளம் உள்ளிட்ட முக்கிய சங்ககால அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவு மற்றும் அமைப்புடன் ஒத்துப்போகின்றன. இதன் அடிப்படையில் இந்தக் கட்டமைப்பு சங்ககாலத்தைச் சேர்ந்ததாக தமிழக தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அகழாய்வின்போது 40 செ.மீ. நீளம், 20 செ.மீ. அகலம், 7 செ.மீ. கனமுடைய செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்புடன், கல்லால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளைக் கொண்ட 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர வடிவ படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிணற்றிற்குள் இறங்க கற்களால் அமைக்கப்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிணற்றின் சுவர்கள் செங்கற்களாலும், படிக்கட்டுகள் கற்களாலும் அமைக்கப்பட்டிருப்பது அக்கால கட்டுமானத் திறமையை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ''தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட முற்கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த முதல் செங்கல் படிக்கிணறு இதுவே'' என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கட்டமைப்பு பண்டைய தமிழர்களின் மேம்பட்ட நீர் மேலாண்மை தொழில்நுட்பத்திற்கான முக்கிய ஆதாரமாக விளங்கும் என்றும் கூறியுள்ளனர்.
கிணற்றின் படிக்கற்களில் காணப்படும் அதிக தேய்மானம், அது நீண்டகாலமாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. படிகள் கிணற்றின் வெளிப்புறத்திலிருந்து நடுப்பகுதி வரை அமைக்கப்பட்டுள்ளன.
கிணற்றின் உட்புறச் சுவர்களில் காணப்படும் நீர்க்கறைகள், அக்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரமாக இருந்ததை வெளிப்படுத்துகின்றன. மேலும், சுவர்களை வலுவாக நிலைநிறுத்த ஒன்றோடொன்று கோர்க்கும் முறையில் செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளதுடன், பிணைப்புப் பொருளாக களிமண் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தப் படிக்கிணறு பழங்கால நீர்வழியின் மீது கட்டப்பட்டிருக்கலாம். கோடை காலங்களில் மக்கள் குடிநீர் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்காக இதைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதுவரை 2 மீட்டர் ஆழம் வரை மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நடைபெறும் அகழாய்வுகளுக்குப் பிறகு கிணற்றின் முழு ஆழமும், அதன் முழுமையான கட்டமைப்பும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகழாய்வில் முதுமக்கள் பயன்படுத்திய ஈமத்தாழிகள், அதிக தகரம் பூசப்பட்ட வெண்கலப் பொருட்கள், இரும்புப் பொருட்கள், சுடுமண் பொருட்கள், விளையாட்டுக் காய்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள், தொங்கட்டான்கள், தக்களிகள், நுண்கற்காலக் கருவிகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஈமப்பகுதியில் இரும்புக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிவப்புப் பூச்சு பூசப்பட்ட பானை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தோள் பகுதியில் தொடர்ச்சியாக மயில் உருவங்கள் வரையப்பட்டிருப்பதுடன், மூடியால் மூடப்பட்டிருந்தது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.










அந்தப் பானையின் வெளியே மனிதப் பற்கள், கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அது மனிதர்களின் ஈமப்பகுதியாக இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பானைகளில் காணப்படும் கிறுக்கல் குறியீடுகள் (Graffiti Marks) அக்கால மக்களின் அடையாளக் குறியீட்டு முறையை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
மலையடிப்பட்டி அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வரும் கண்டுபிடிப்புகள், தென் தமிழகத்தில் சங்ககால மக்கள் வாழ்ந்த விதம், நீர் மேலாண்மை திறன், வணிக வளர்ச்சி, கட்டடக்கலை, அடக்க முறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.
குறிப்பாக, ரோமானிய தங்க நாணயங்கள் கிடைத்த வரலாறும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட படிக்கிணறும் இணைந்து பார்க்கும்போது, இப்பகுதி சங்ககாலத்தில் செழித்த வணிக மற்றும் குடியிருப்பு மையமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த அகழாய்வு, அகழாய்வு இயக்குநர் முனைவர் வி.பி. யத்தீஸ்குமார் மற்றும் அகழாய்வு பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நடைபெறவுள்ள அகழாய்வுகளில் தமிழர் நாகரிக வரலாற்றை மாற்றியமைக்கும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிச்சத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு தொல்லியல் ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.





















