மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்பட...
தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக விசாரித்தோம்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்ய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். அதன்படி பிப்ரவரி 27-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 28-ம் தேதி காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு தலைமையிலான குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மார்ச் 2-ம் தேதி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது தி.மு.க.

நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள், "2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதி போட்டியிட்டோம். வி.சி.க-வின் தகுதிக்கு 6 சீட் என்பது மிக மிக குறைவுதான். ஆனாலும் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதால் எங்கள் தலைவர் ஒப்புக் கொண்டார். ஆனால் மாநில கட்சியாக அங்கீகாரம்பெற்றிருக்கும் நிலையில் 12 தொகுதிகளை கேட்கவுள்ளோம்.
ஆனால் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுடன் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்திருப்பதால் தொகுதி பங்கீட்டில் தி.மு.க-வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது அதனை புரிந்துகொண்டு 8 தொகுதி கொடுத்தால் ஏற்க தயாராக இருக்கிறோம்" என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க மாணவரணி துணைச் செயலாளர் நெப்போலியன் "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க ஒரு ராஜ்யசபா உறுப்பினர்கள் தந்தால் வரும் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எங்கள் தோழர்கள் மிகவும் உற்சாகமாக தங்களுடைய உழைப்பை இன்னும் அதிகமாக செலுத்தி திமுகவை மீண்டும் அரியணை ஏற்றுவார்கள். தி.மு.க தான் எங்கள் தலைவரை முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது, கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு உதவியது. இன்று ஒரு ராஜ்யசபா உறுப்பினர் முன்னை விட அதிகப்படியான சட்டசபை தொகுதிகள் தந்தால் அது தி.மு.க மீது ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் மீது நன் மதிப்பு ஏற்படும்" என்றார்.
வி.சி.க 8 சீட் கணக்கை பரிசீலிக்குமா தி.மு.க? பொருத்திருந்து பார்ப்போம்!


















