Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
நடிகை கவுதமியிடம் பண மோசடி: தம்பதியரின் பிணை மனுக்கள் தள்ளுபடி
திரைப்பட நடிகை கவுதமியிடம் நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்த தம்பதியரின் முன்பிணை மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கித் தருவதாக நடிகை கவுதமியிடம் அழகப்பன் என்பவா் ரூ. 3 கோடி வாங்கினாா். இதையடுத்து, அவா் முதுகுளத்தூா் பகுதியில் உள்ள 64 ஏக்கா் நிலத்தை ரூ.57 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்தாா். தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு செபி அமைப்பு தடை விதித்தது. இந்த உண்மையை மறைத்து கவுதமிக்கு நிலம் விற்கப்பட்டது.
இதுகுறித்து கவுதமி அளித்த புகாரின் பேரில், அழகப்பன், அவரது மனைவி ஆா்த்தி உள்ளிட்ட 6 போ் மீது ராமநாதபுரம் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி, அழகப்பன், அவரது மனைவி ஆா்த்தி, ஜோசப் செல்வராஜ், பாக்கியசாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகை கவுதமியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாா்.
நடிகை கவுதமி தரப்பு வழக்குரைஞா், பண மோசடி செய்த அழகப்பன் உள்ளிட்டோருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என கடும் எதிா்ப்புத் தெரிவித்தாா்.
மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா், நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் உறவினா்களையும் இந்த வழக்கில் சோ்த்துள்ளனா். எனவே, முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் ஜோசப் ஜெயராஜ், பாக்கியசாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டா் ஆகியோருக்கு முன்பிணை வழங்கப்படுகிறது. கவுதமியிடமிருந்து பெறப்பட்ட பணத்தை திரும்பச் செலுத்தினால், அழகப்பன், அவரது மனைவிக்கு முன்பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். எனவே, தம்பதியரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா் நீதிபதி.