Renault Duster 1.3L DCT on Dehradun's Wildest Ghat Roads — Can It Handle the Hil...
நாதிர் ஷா கடத்திய கோஹினூர் வைரம்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
வரலாற்றில் இன்று!
மார்ச் 22, 1739: இந்த நாளில்தான் நாதிர் ஷா டெல்லியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மயில் சிம்மாசனத்தையும், கோஹினூர் வைரத்தையும் அதிகாரபூர்வமாகக் கைப்பற்றினார்.

நாதிர் ஷா (Nader Shah) ஈரானின் மாபெரும் பேரரசராக வரலாற்றில் அறியப்பட்டாலும், அவர் பிறப்பால் அரச வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு ஏழை ஆட்டு இடையர் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையில் வாடிய அவர், தனது அபாரமான போர் வியூகங்களாலும், தைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து ஈரானின் அரியணையைக் கைப்பற்றினார். சிறந்த போர் தந்திரங்களைக் கொண்டிருந்ததால், அவரை வரலாற்றாசிரியர்கள் 'பாரசீகத்தின் நெப்போலியன்' என்று அழைக்கிறார்கள்.
1739 ஆம் ஆண்டு, இந்தியாவின் செல்வ வளத்தின் மீது ஆசை கொண்ட நாதிர் ஷா, முகலாயப் பேரரசர் முகமது ஷா மீது படையெடுத்து அவரை கர்னால் போரில் எளிதாகத் தோற்கடித்தார். டெல்லியை முழுமையாகச் சூறையாடி, ஷாஜகானால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற 'மயில் சிம்மாசனத்தை' (Peacock Throne) கைப்பற்றினார். இந்தச் சிம்மாசனத்தில்தான் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது என்றும், அதை அவர் பெயர்த்து எடுத்தார் என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.

ஆனால், மிகவும் பிரபலமான இன்னொரு செவிவழிக் கதையும் இந்த வரலாற்றுக்கு உண்டு:
முகமது ஷா தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற அந்த வைரத்தை நாதிர் ஷாவிடம் சிக்காமல் இருக்க, தனது தலைப்பாகைக்குள் (Turban) மறைத்து வைத்திருந்தார். இதைப் பற்றி ஒரு ரகசிய ஒற்றர் மூலம் நாதிர் ஷாவுக்குத் தெரியவந்தது. அதை பலவந்தமாகப் பறிக்காமல் ஒரு தந்திரம் செய்தார் நாதிர் ஷா. சமாதானம் பேசுவது போல் முகமது ஷாவை அழைத்த அவர், "நமது நட்பின் நிரந்தர அடையாளமாக, நமது தலைப்பாகைகளை மாற்றிக்கொள்வோம்" என்று கூறினார். மன்னர் மரபுப்படி இதை மறுக்க முடியாத முகமது ஷா, வேறு வழியின்றி தனது தலைப்பாகையை நாதிர் ஷாவிடம் கொடுத்தார். கூடாரத்திற்குச் சென்று தலைப்பாகையைப் பிரித்துப் பார்த்த நாதிர் ஷா, அதிலிருந்த பிரம்மாண்ட வைரத்தின் ஒளியைக் கண்டு வியந்து, `கோஹ்-இ-நூர்' (Koh-i-Noor) என்று சத்தமிட்டார். பாரசீக மொழியில் இதற்கு `ஒளியின் மலை' என்று அர்த்தம். அன்று அவர் வைத்த பெயர்தான் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
கட்டுக்கதைகளும் உண்மைகளும்
கட்டுக்கதை 1: கோஹினூர் வைரம்தான் உலகின் மிகப்பெரியதா?
உண்மை: கோஹினூர் வைரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் மிகப் பெரியதாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று இது உலகின் மிகப்பெரிய வைரம் அல்ல. ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 'கல்லினன்' (Cullinan) போன்ற வைரங்கள் இதைவிடப் பல மடங்கு பெரியவை. கோஹினூர் வைரம் பல மன்னர்களிடம் கைமாறியபோது, பலமுறை வெட்டப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு அதன் அசல் எடையில் பாதியளவு குறைந்துவிட்டது.

கட்டுக்கதை 2: இந்த வைரத்தில் சாபம் உள்ளது; ஆண்களுக்கு அழிவைத் தரும்
உண்மை: கோஹினூர் வைரத்தை வைத்திருந்த பல மன்னர்கள் (முகலாயர்கள், நாதிர் ஷா, ஆப்கான் மன்னர்கள், சீக்கிய மன்னர்கள்) ரத்தக் களரியான மரணத்தைச் சந்தித்தனர் அல்லது ராஜ்ஜியத்தை இழந்தனர் என்பது வரலாற்று உண்மை. நாதிர் ஷா கூட பின்னாட்களில் கடுமையான மனநலம் பாதிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் தன் சொந்த மகனையே குருடாக்கினார்; இறுதியில் தன் சொந்தக் காவலாளிகளாலேயே படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும், இந்த சாபம் என்பது விக்டோரியன் காலத்தில் பிரிட்டிஷாரால் இந்த வைரத்திற்கு ஒரு மர்மத்தைக் கூட்ட உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையே தவிர, இதில் எந்த அறிவியல்பூர்வ உண்மையும் இல்லையாம்.



















