"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச ...
"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்
அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். ஆனால், நான் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

அந்த நிகழ்வில் அவர், "'கான் சிட்டி' திரைப்படம் வெற்றி பெற்று 25-வது நாளை எட்டியிருக்கிறது. நான் பொதுவாக யூடியூப் அதிகமாகப் பார்ப்பதில்லை. அந்தக் காணொளியில் ஒருவர், 'படம் நல்லா இருந்தா மட்டும் போவோம்' என்று நினைத்த ஒரு யூடியூப் விமர்சகர், படத்தைப் பார்த்துவிட்டு 'வெளியிலேயே வர மனமில்லாத அளவுக்குப் படம் அவ்வளவு சுவாரசியமாக இருந்தது' என்று பாராட்டியிருந்ததைப் பார்த்தேன்.
'அருணாச்சலம்' படத்திற்குப் பிறகு, 'வடிவுக்கரசி அம்மா இதில் சிறப்பாக நடித்திருக்கிறார்' என்று பலரும் பாராட்டுவதைப் படிக்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
அதேவேளையில், உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள்கிறேன். 'வடிவுக்கரசி, யோகி பாபு நன்றாக நடித்திருக்கிறார்கள்' என்று யூடியூபில் பாராட்டும் நீங்கள், 'இவர்களுக்கு மேலும் வாய்ப்புகளும் வேலைகளும் கொடுங்கள்' என்று ஏன் எழுதுவதில்லை? அந்தக் காலத்தில் நாளிதழ்களில் 'இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று ஒரு வரி எழுதுவார்கள்.
அதைப் பார்த்துத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வாய்ப்பு தருவார்கள். அதனால் இந்த விழா முடிந்ததும், 'வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்; அவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் தரலாம்' என்றும் எழுதுங்கள். அது எனக்கு வேலை கிடைக்க உதவியாக இருக்கும்.
இப்படத்தில் நடித்த யோகி பாபு மிகவும் பிசியாக இருக்கிறார். தம்பி அர்ஜுன் தாஸ் ஈ.சி.ஆரில் செட் போட்டுப் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு யூடியூப் எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன்.
'அம்மா நீங்கள் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள்' என்று பலரும் சொல்கிறார்களே தவிர, கையில் ஒரு படம் கூட இல்லை. எனக்குத் தேவை வேலைதான். திரைப்படங்களில் முழுமையாக நடித்துவிட்டால், 'அடுத்து 3 நாள் அல்லது 5 நாள் வேலை தர முடியாது' என்கிறார்கள்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் சார் பேச வரும்போது, 'நான் எடுக்கும் படங்களிலாவது வடிவுக்கரசி அம்மாவுக்குக் குறைந்தபட்சம் ஒரு நாள் வேலையாவது தருவேன்' என்று வாக்குறுதி அளித்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
அவருடைய குழுவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், அர்ஜுன் தாஸ் என எல்லாரும் இருக்கும்போது நான் மட்டும் இருக்கக்கூடாதா? என் நடிப்பு நன்றாக இல்லையா? அனைவரும் பொய் சொல்கிறீர்களா? என் நடிப்பு நன்றாக இருக்கிறது என்று உங்கள் மனசாட்சிக்குத் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு வேலை கொடுங்கள்" எனப் பேசியிருக்கிறார்.


















