மேட்டூர் அணையின் பிரமாண்ட அடித்தளம்; வலியும், வாழ்த்துகளும் | அணை ஓசை 21
நிலம்/வீடு வாங்கப் போறீங்களா? - சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் என்னென்ன? |பணம் வளர்ப்போம்
முந்தைய அத்தியாயங்களில் சொன்ன அனைத்தையும் செக் செய்து, ஒரு நிலம் அல்லது வீட்டை வாங்க செலெக்ட் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்து, சொத்து சார்ந்த ஆவணங்களில் கவனம் செலுத்த வேண்டும். காரணம், இதுதான், 'அது உங்களுடைய சொத்து' என்று காட்டும் லைசன்ஸ். இதில் சின்ன தவறு இருந்தால் கூட, அது பின்னாளில் சிக்கலாக எழ வாய்ப்புகள் மிக அதிகம்.
அப்படி என்னென்ன ஆவணங்களைச் செக் செய்ய வேண்டும் என்பதை கூறுகிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி.

1. சொத்தின் உரிமை மற்றும் மூல ஆவணங்கள்:
மூல ஆவணங்கள்: குறிப்பிட்ட சொத்து உங்களுக்கு முன் யார் யார், யார் கைகளுக்கு மாறி வந்துள்ளது என்பதை விளக்கும் முந்தைய கிரயப் பத்திரங்கள்.
நீங்கள் வாங்கும் சொத்தை உங்களுடைய உரிமையாளருக்கு யாராவது எழுதித் தந்திருந்தால், அது சம்பந்தப்பட்ட கிரயப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், தான பத்திரம், விடுதலைப் பத்திரம் அல்லது பாகப்பிரிவினைப் பத்திரமா என்பதை பக்காவாகப் பார்த்துவிடுங்கள்.
பவர் ஆஃப் அட்டர்னி: சொத்தை விற்பவர் 'பவர்' பெற்றவராக இருந்தால், அந்தப் பவர் பத்திரம் அன்றைய தினம் செல்லுபடியில் இருக்கிறதா அல்லது ரத்து செய்யப்பட்டுவிட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.
அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு: வங்கிக் கடன் வாங்குவதற்கும், மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் அசல் பத்திரங்கள் விற்பனையாளரிடம் உள்ளதா என்பதை அறிந்து சரி பார்த்து உறுதி செய்துவிடுங்கள்.
அடமானம் மற்றும் மீட்பு: சொத்தின் மீது ஏதேனும் பதிவுத் துறை அலுவலகம் முன்பு பதிவு செய்யப்பட்ட அடமானக் கடன் வாங்கப்பட்டுள்ளதா? கடன் அடைக்கப்பட்டிருந்தால் அதற்கான 'அடமான மீட்புப் பத்திரம்' மற்றும் ரசீதுகள் சம்பந்தப்பட்ட பதிவுத் துறை ஆவணங்களில் சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை செக் செய்யுங்கள்.

2. வருவாய்த்துறை ஆவணங்கள்:
பட்டா, சிட்டா, அடங்கல், FMB மற்றும் அ-பதிவேடு (A-Register):
நிலம் விற்பவர் பெயரில் பட்டா இருக்கிறதா, நிலத்தின் வகைப்பாடு (நன்செய், புன்செய், நத்தம்) என்ன என்பதை அ-பதிவேடு மூலம் சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிலம், அரசு சார்ந்த அல்லது அரசின் ஏதோ ஒரு நிபந்தனைக்கு உட்பட்டு விற்பனைக்குத் தடைசெய்யப்பட்டு உள்ளதா அல்லது சட்டப்படி விற்பனைக்கு உகந்ததா என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
FMB (Field Measurement Book): புல வரைபடம் மூலம் நிலத்தின் சரியான வடிவம் மற்றும் அளவுகளைச் சரிபார்க்கலாம்.
3. வில்லங்கச் சான்றிதழ்:
குறைந்தது கடந்த 30 ஆண்டுகள்
சொத்தின் மீது ஏதேனும் கடன், ஜப்தி அல்லது வில்லங்கம் உள்ளதா என்பதை அறிய குறைந்தது கடந்த 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழை உரிய சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப் பெற்று சரிபார்க்க வேண்டும்.
4. மனைப் பிரிவு மற்றும் கட்டிட அங்கீகாரங்கள்:
அங்கீகார அமைப்புகள்: CMDA, DTCP, மாநகராட்சி, நகராட்சி அல்லது ஊராட்சி அமைப்புகளின் முறையான ஒப்புதல் (Approval) உள்ளதா?

ஒதுக்கீடுகள்: OSR (Open Space Reservation) எனப்படும் பூங்காக்களுக்கான இடம், பொதுப் பயன்பாட்டு இடம் மற்றும் சாலைகளுக்காக உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட தானப் பத்திரங்கள் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
5. அரசு நிலக் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள்:
நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில், தொழில்பேட்டை மண்டலங்கள், வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற நில உச்சரம்புச் சட்டம் அல்லது பிற பொதுப் பயன்பாடுகளுக்காக அரசு இந்த நிலத்தைக் கையகப்படுத்த அறிவிப்பு ஏதேனும் வெளியிட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
6. நடப்பு வரி மற்றும் கட்டண ரசீதுகள்:
சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கால்வாய் வரி, மின்சாரக் கட்டணம் மற்றும் காலி மனை வரி ஆகியவை நடப்புத் தேதி வரை முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதற்கான ரசீதுகளைக் கேட்டு வாங்கி கட்டாயம் செக் செய்துவிடுங்கள்.
இல்லையென்றால், அந்தக் கட்டணங்கள், அபராதங்களோடு பின்னர் உங்கள் தலையில்தான் வந்து விழும்.
7. விற்பனையாளர் விவரங்கள் மற்றும் சொத்தின் எல்லைகள்
விற்பனையாளர் விபரம்: சொத்தை விற்பவரின் ஆதார் கார்டு, PAN கார்டு நகல், கைபேசி எண் போன்ற தனிப்பட்ட அடையாளச் சான்றுகள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்னாளில் ஏதேனும் பிரச்னை வந்தால், அதன் மூலம் தொடர்பு கொள்ள உதவும்.

சொத்தின் எல்லைகள்: பத்திரத்தில் உள்ளவாறு சொத்தின் நான்கு எல்லைகள், நீள அகல அளவுகள் நிலத்தில் சரியாக இருக்கிறதா என்பதை அரசு உரிமம் பெற்ற நில அளவையர் மூலம் அரசிற்கு உரிய கட்டணம் செலுத்தி அளந்து பார்த்து கொள்ள வேண்டும்.
நீதிமன்ற வழக்குகள்: சொத்தின் மீது நீதிமன்றத்தில் ஏதேனும் சிவில் வழக்குகளோ, அட்டாச்மென்ட்களோ அல்லது பழைய விற்பனை ஒப்பந்தங்களோ நிலுவையில் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். நிலுவையில் சொத்து சார்ந்த விற்பனை ஒப்பந்த பத்திரம் மற்றும் அது சார்ந்த முன்பணம் பாக்கி உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
8. அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை:
FSI & Setback விதிகள்: கட்டடம் அனுமதிக்கப்பட்ட தரைப்பரப்பு குறியீடு (FSI) மற்றும் பக்கவாட்டு இடைவெளிகளின் (Setback) படி கட்டப்பட்டுள்ளதா?
அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மற்றும் பார்க்கிங்: எத்தனை தளங்களுக்கு அனுமதி பெறப்பட்டதோ அத்தனை தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதா? வாகன நிறுத்த அனுமதி மற்றும் UDS - Undivided Share பிரித்துக் கொடுத்திருப்பது சம்பந்தப்பட்ட நில அளவு சார்ந்து சரியாக உள்ளதா?
சான்றிதழ்கள்: உரிய அரசு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட கட்டட நிறைவுச் சான்றிதழ் மற்றும் குடியேற்றச் சான்றிதழ் உள்ளதா?
*கூட்டுப் பொறுப்புகள்: குடியிருப்போர் நலச் சங்கத்தில் ஏதேனும் பராமரிப்புக் கட்டண நிலுவை உள்ளதா? பொது இடங்கள், பயன்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்த விபரங்கள் சரியாக உள்ளதா? என்பதை முழுமையாக விசாரித்து விடுங்கள்.


















