UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்...
நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்
தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தவளைகளின் தோல் மிகவும் மெல்லியதாகவும், ஈரப்பதமாகவும் இருக்குமாம். அதாவது தவளைகளில் ஏராளமான சுரப்பிகள், ரத்த நாளங்கள் உள்ளன, இது 'கியூட்டேனியஸ் ரெஸ்பிரேஷன்' (Cutaneous Respiration) எனப்படும் செயல்முறையை அனுமதிக்கிறது.
இதன் மூலம் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் நேரடியாக தோல் வழியாக இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. அதுமட்டுமில்லாமல் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.

இந்த செயல்முறை தவளைகள் தண்ணீருக்கு அடியில் இருக்கும்போதும் அல்லது குளிர்கால உறக்கத்தின்போதும் சுவாசிக்காமல் உயிர்வாழ மிகவும் உதவுகிறது.
சுவாசிப்பது மட்டுமில்லாமல், தவளைகள் தங்கள் தோல் வழியாகவே தண்ணீரையும் குடிக்குமாம். அவற்றின் அடிவயிற்றில் "டிரிங்கிங் பேட்ச்" (drinking patch) எனப்படும் சிறப்புப் பகுதிகள் உள்ளன.
இந்தப் பகுதிகள் அதிக இரத்த நாளங்களைக் கொண்டுள்ளதால் ஈரமான மண், இலைகள் அல்லது பிற பரப்புகளில் இருந்து நேரடியாக ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் திறன் பெற்றவை என்று டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் இதுகுறித்து வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்கள் குறைவாக உள்ள வறண்ட சூழல்களில் வாழும் தவளைகளுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் அவை நீர் நிலைகளைத் தேடிச்செல்லாமல், தங்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைப் பெறுகின்றன.
தவளைகளின் தோல் சுவாசம் மற்றும் நீர் உறிஞ்சுதல் திறன் அவற்றுக்கு பல நன்மைகளை அளித்தாலும், சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. ஊடுருவக்கூடிய தோல் அமைப்பு காரணமாக, அவை சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
நீர் மற்றும் நிலத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் எளிதில் அவற்றின் உடலுக்குள் நுழைந்து, உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இந்த உயிரினங்களைப் பாதுகாக்க, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.



















