Book Fair: "சாதி, நிலம், பொருளாதாரம் போன்றவற்றையும் பேசுவதுதான் தலித் பெண்ணியம்"...
நெல்லை: பாஜக நிர்வாகியின் மாமியாரைக் கட்டிப்போட்டு நகை கொள்ளை; எச்சரிக்கும் போலீஸ்; என்ன நடந்தது?
நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவர், பா.ஜ.க மாவட்ட வர்த்தகப் பிரிவு அணியின் செயலாளராக உள்ளார். இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இதனால், சுத்தமல்லியில் உள்ள வீட்டில் சன்னாசியின் மாமனார் மாரி மற்றும் 70 வயதான மாமியார் ஆண்டிச்சி ஆகியோர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மதியம் ஆண்டிச்சி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த இருவர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். ஆண்டிச்சி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது, வீட்டிற்குள் நுழைந்த இருவரும் அவரது வாயைப் பொத்தி கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர், அவர் அணிந்திருந்த கம்மல், தங்கச்சங்கிலி, மூக்குத்தி என 15 சவரன் தங்க நகைகளைப் பறித்துள்ளனர். மேலும், பீரோவை உடைத்து அதிலிருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றனர்.
பின்னர், சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ஆண்டிச்சியின் கணவர் மாரி, ஆண்டிச்சி கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது கயிற்றுக் கட்டினை அவிழ்த்துவிட்டு நடந்ததைக் கேட்டார்.
பின்னர் இது குறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டின் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரின் முகங்கள் தெளிவாகப் பதிவாகியிருந்தன.
இதனையடுத்து பேட்டை அண்ணாமலை நகரைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான சுந்தர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு நகைகள், பணத்தைக் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்றால் போலீஸில் மாட்டிவிடுவோம் என்ற அச்சத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன், கடந்த மாதம் பைக் திருட்டு வழக்கில் பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அக்காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்த அவர், கடந்த 8-ம் தேதி நடந்த திருட்டுச் சம்பவத்திற்கு 3 நாள்கள் முன்பு வரை கையெழுத்திட்டு வந்துள்ளார். அதன் பிறகு அவர் தலைமறைவானார். சி.சி.டி.வி கேமரா பதிவுகளில் அவரது முகம் தெளிவாகத் தெரிந்ததால் அவர்தான் குற்றவாளி என்பதை முடிவு செய்தோம்.

இதில், மணிகண்டனின் உறவினரான சுந்தர், கொள்ளையடிக்கப்பட்ட மூதாட்டி ஆண்டிச்சியின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர். அதனால்தான் பணப்புழக்கம், நகை வைத்துள்ளது அவருக்குத் தெரிந்துள்ளது.
வாடகைக்குக் குடியமர்த்துபவர்கள் அவர்களின் ஆதார் நகலைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சந்தேகப்படும்படியான நபராக இருந்தால் அவர்களுக்கு வீடுகளை வாடகைக்குக் கொடுக்கக்கூடாது” என்றனர்.


















