Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா வ...
பஞ்சம், காலரா, பெருவெள்ளம்; வேலைநிறுத்தம் காணாத கட்டுமானம் - தொலைநோக்கு முன் தணிக்கை முறை | அணை ஓசை
மேட்டூர் அணை கட்டத் துவங்கியவுடன் சுற்றுப் பகுதிகளில் இருந்து மக்கள் அங்கு கிடைத்த வேலைவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள மேட்டூர் கிராமத்தில் வந்து குவிந்தனர். முதலாம் உலகப் போரின் பாதிப்புகள் உலகம் முழுவதும் உணர்ந்த சமயம் அது. 1925-ல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தில் இருந்தது! அவை கிடைப்பது அரிதாக இருந்தது.
மேட்டூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள் சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பரவி இருந்தன. இந்தப் பகுதிகள் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. 1923-லிருந்து 1925 வரை, மழை பொய்த்துப் போனதால் இந்த நிலை நிலவியது. அதே சமயம் 1924-ல் காவிரியில் ஏற்பட்ட கற்பனைக்கெட்டாத பெருவெள்ளம் காரணமாக ஆற்றின் கரையோரங்களில் அமைந்திருந்த விளைநிலங்களில், ஆற்றில் அடித்து வரப்பட்ட பெருமளவிலான மணல் படிந்துவிட்டது. இதனால் விளைநிலங்கள் எந்தப் பயனும் இன்றி பாழாகின; விளைச்சலுக்குத் தகுதியற்றதாக மாறிவிட்டன.
மிகப் பிரமாதமாக வடிவமைக்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகள், தேவைக்கேற்ற தண்ணீர் வசதி மற்றும் இதர வசதிகள், தொழிலாளர்களை அதிக அளவில் இங்கு வரவழைத்ததற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இங்கு வேலை கிடைத்த கூலிகளுக்கு நிரந்தர வருமானம், நிலைபெற்ற தொடர்ந்து வாழ்வதற்கான வசதிகள், திருப்தியான வாழ்க்கை வசதிகள் என இங்கு பல ஆண்டுகள் தொடர்ந்தன. மேட்டூரில் அரசால் ஏற்படுத்தப்பட்ட மலேரியா ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் உடல்நலம் மேம்பாடு குறித்து எடுக்கப்பட்ட முன்முயற்சிகள், கூலிகளின் உடல்நலனை நன்கு பேண வழிவகை செய்து தந்தன.

இது குறித்தெல்லாம் அறியாமையில் உழன்று கொண்டிருந்த ஏழை மக்களுக்கு, இந்த நடவடிக்கைகள் அவர்களது உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் தரம் நன்கு நிலைபெற்றதை உணர்ந்து கொள்ள முடிந்தது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தனர்.
திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலை இருந்தது உண்மை. அருகில் உள்ள கிராமங்களில் இருந்தோ அல்லது வெகு தொலைவில் இருந்தோ ஒப்பந்ததாரர்கள் மூலமாக ஆட்களுக்கு முன்பணம் கொடுத்து அழைத்து வர வேண்டிய அவசியம் ஏற்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. அவர்களை அழைத்து வர பெரும் வழிப்பயணச் செலவுகள் ஏற்படும் என்பதாக அதிகாரிகள் கணித்திருந்தனர். இவை அனைத்தும் பொய்யாகிப் போனன. ஒரு கட்டத்தில் உள்ளூர் ஆட்களைக் கூட வேண்டாம் என்று தவிர்க்கும் படியாகத் தேவைக்கு மேல் ஆட்கள் கிடைத்தனர்.
மேட்டூர் மற்றும் தூக்கணாம்பட்டி என்ற இரண்டு கிராமங்களில் இந்த அணைத் திட்டம் ஆரம்பித்த போது, அங்கு அப்போது மக்கள் தொகை 500 ஆக மட்டுமே இருந்தது. இதில் பெரும்பாலான மக்கள் திறமையற்ற, இலகுவான விவசாய வேலைகளை மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தனர். இந்த அணை கட்டப்பட்டு கொண்டிருந்த போது, வேலைகள் முழு அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் 11,000 கூலித் தொழிலாளர்கள் மட்டும் வெவ்வேறு வேலைகளில் அமர்த்தப்பட்டு வேலை செய்தனர்.
அணை கட்டுமானத்தில் பெருமளவு ஆட்கள், கற்களை உடைப்பவர்கள் மற்றும் கற்களை இடம்பெயர்ப்பவர்களின் தேவை அதிகமாக இருந்தது. இது போன்ற ஆட்கள் "ஒட்டர்கள்" எனப்படுவர். மேட்டூரில் இருந்து 50 மைலுக்கு மேல் தொலைவிலிருந்தெல்லாம் இம்மாதிரியான ஒட்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அரசுத் துறையின் மூலம் 1800 குடிசைகள் முதலில் கூலிகளுக்காகக் கட்டப்பட்டன. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வேலை செய்த கூலிகளுக்கு, எந்த வாடகையும் இல்லாமல் குடிசைகள் ஒதுக்கப்பட்டன. ஒப்பந்ததாரர்களின் கீழ் வேலைக்கு வந்த கூலிகளுக்குக் குடிசைகள் கட்டிக் கொள்வதற்கு இலவச இடம் ஒதுக்கப்பட்டது. குடிசைகள் அடுக்கு வரிசையில் சீராகச் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை பெற்று, இடநெருக்கடியின்றி கட்டப்பட்டன. தண்ணீர் குழாய்கள் ஒவ்வொரு வரிசையிலும் குடிசைகளுக்கு அருகில் பொதுவாக அமைக்கப்பட்டன. பின்னாளில் குடிசைகள் நல்ல பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டு வீடுகளாக மாற்றிக் கட்டி தரப்பட்டன!
ஆரம்ப காலத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலிகளுக்குச் சுகாதார முறையில் கழிவறை உபயோகிப்பது, சுத்தமாக இருப்பது போன்ற வாழும் முறைகள் சரியாகத் தெரியவில்லை என்ற புகார் எழுந்தது. சுகாதார அதிகாரிகள் சுத்தத்தைப் பேண வெகு சிரமம் எடுத்துக் கொண்டார்கள். அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது!

நாட்கள் செல்லச் செல்ல மக்கள் சுத்தம் பேணுவது குறித்த முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டு, தங்குமிடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் சுத்தம் கடைப்பிடிக்கத் தொடங்கினர். பொது சுகாதாரம் பேணப்பட்டது. இதனால் தொலைநோக்குப் பார்வையில் நீண்ட காலம் பிடித்த இந்த அணை கட்டும் திட்டத்திற்குப் பெரும் பயன் ஏற்பட்டது என்பது நிஜம்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
1926 மற்றும் 1927-ம் ஆண்டுகளில், ஜூலை மாதம் காவிரி ஆற்றில் புது வெள்ளம் வந்த போது காலரா தொற்று ஏற்பட்டது. அந்த சமயத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு உண்டான வாய்ப்பு அமைந்திருக்கவில்லை. ஆற்றின் முன் பகுதிகளில் கிராமத்தினர் மாசுபடுத்தியதால், திட்டப் பணியில் வேலை செய்த கூலிகள் குளிக்கவும், குடிக்கவும் இயலாத நிலை இருந்து வந்தது. காலரா தொற்று ஏற்பட்ட 1927-ம் ஆண்டு, ஏறத்தாழ அனைத்து ஒப்பந்ததாரர்களின் கூலிகளும் மேட்டூரை விட்டுச் சொந்த கிராமங்களுக்கு ஓடிவிட்டனர். திரும்பி வர இரண்டரை மாதங்களுக்கும் மேலானது. பெரும்பாலும் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை. மக்கள் தடுப்பூசியைக் கண்டு பயந்தனர்.
நிரந்தர தண்ணீர் குழாய்கள் அமைத்துப் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த பிறகு மேலே கண்ட மலேரியா தொற்று ஏற்படவே இல்லை. அதனால் கட்டடப் பணி பாதிக்கப்படவில்லை. 1928-க்கு பிறகு முந்தைய வருடங்களில் ஆனது போல் காலரா பாதிப்பு ஏற்பட்டு வேலைகள் நின்றிருந்தால், ஒரு நாளைக்கு ரூபாய் 1500 முதல் ரூபாய் 7000 வரை திட்டக் கணக்கில் வட்டி நஷ்டம் ஏற்பட்டிருக்கும். எனவே, போதுமான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு கூலிகளின் உடல்நலம் பேணவும், குடியிருப்புகளிலும் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கவும் தொடர் முயற்சிகளைச் சுகாதார அதிகாரிகள் எடுத்து வந்தனர்.
வேறு பகுதிகளில் வசித்து வந்த இதர தொழிலாளர்கள், மேட்டூரில் வசிப்பது மிகுந்த சுகாதாரமானது என்றும் நல்ல உடல்நிலையில் வாழத் தகுந்த இடம் எனவும் உணரத் தொடங்கி மேட்டூருக்குக் குடிபெயர்ந்தனர். அந்த அளவுக்கு மேட்டூரில் குடியிருப்பது நலம் என்ற முடிவில் இருந்ததால், சில காலம் கழித்து மேட்டூரில் இருந்து தொப்பூர் வரைக்கும் சாலை வசதி திட்டத்தைச் செயல்படுத்திய போது அங்கு சென்று வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினமாகியது. வசதியான மேட்டூரில் இருந்து வேறு இடம் பெயர்ந்து செல்ல ஆட்கள் தயாராக இல்லை என்பதே காரணம்! அங்கு இங்குள்ளது போல நல்ல தண்ணீர் வசதி கிடையாது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது. மேலும் அந்தச் சாலை மார்க்கத்தில் மலேரியா பாதிப்புகள் இருந்தன என்பதும் வேறு காரணங்களாகும்.

சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மேட்டூருக்கு வந்த பெரும்பாலான ஆட்கள் இந்த வேலையில் திறமையற்றவர்களாக இருந்தனர். அதுவரை பெரும்பாலானோருக்கு விவசாயம் மட்டுமே தொழிலாக இருந்துள்ளது.
மெள்ள "செமி ஸ்கில்டு" எனப்படும் ஓரளவு வேலை பழகிய இடைப்பட்ட திறமைசாலிகளாகப் பயிற்சி அளித்த பின் வேலையில் முன்னேற்றத்தைக் கண்டனர். மேலும் திறமை பெற்று திறமை வாய்ந்தவர்களாக, மேசன்களாக, கல் உடைப்பவர்களாக, ஃபிட்டர் வேலைக்குத் தகுதி படைத்தவர்களாக என வெவ்வேறு வேலைகளில் நல்ல திறமையுள்ளவர்களாக உருவெடுத்தனர்.
1929-ல் இருந்து பெரிய அளவில் கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்ற போது, ஏராளமான திறமையுள்ள மேசன்களின் தேவை இருந்தது. மிகவும் திறமையான ஆட்களின் தேவைக்கு மெட்ராஸ் மாகாணத்தின் வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்கள் தருவிக்கப்பட்டனர். வட இந்தியாவில் இருந்தும் ஆட்களை அழைத்து வந்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமே!
நல்லுறவு
வேலை அளிக்கும் நிறுவனம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வேலையாட்களின் ஒரு போக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது எனலாம். ஏனெனில், ஒருபோதும் வேலைநிறுத்தம் என்பது இங்கு நடைபெறவே இல்லை. சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை உடனடியாகத் தீர்த்து வைக்கப்பட்டன. கூலிகளுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் மிகக் குறைவு. ஆனால், தொடர்ந்து கிடைத்த வேலை, சரியான நேரத்தில் சம்பளப் பட்டுவாடா, மேலும் அங்கு நிம்மதியாக வாழக் கிடைத்த தண்ணீர், வீடு உள்ளிட்ட வசதிகள் தொழிலாளர்களைத் திருப்தியாக வாழ வகை செய்தன. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட அவசர வேலைகளுக்கு ஆட்கள் வேலைக்கு வந்தார்கள். முதலாளி - தொழிலாளி என்ற உறவு நல்லுறவாக அங்கு அமைந்தது. அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்து வந்தது. அனைத்துக் கூலிகளுக்கும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு காலை அவர்களுக்கு உண்டான சம்பளம் தரப்பட்டது.
தொழிலாளர்கள் நலன்!
ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தையில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல வாய்ப்புகள் கிட்டியது. இது போன்று தொடர்ந்து சம்பளப் பட்டுவாடா குறிப்பிட்ட நேரத்தில் அளித்ததால் தொழிலாளர்களின் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் எப்போதும் வேலை கேட்டு கூலிகள் வந்த வண்ணம் இருந்தனர். மேட்டூர் அணை கட்டிய போது கிடைத்த பயன் குறித்த காரணங்களை அலசினால், வசதியான வீடு, நல்ல தண்ணீர் வசதி மற்றும் இதர வசதிகள் தந்த பலன்களே என நிரூபணம் ஆனது. இவைகளை ஏற்படுத்தித் தராமல் இருந்திருந்தால் இந்த அணை கட்டி முடிக்க இன்னும் பல வருடங்கள் தாமதமாகி இருக்கலாம். மேற்கண்ட காரணங்களால் வசதியான இந்த மேட்டூரை விட்டு வேறு எங்கும் செல்ல மனம் விரும்பாமல் அங்கேயே தொடர்ந்து வேலை செய்து மகிழ்ச்சியாகவும் உடல் நலத்தோடும் வாழத் தொழிலாளர்கள் விரும்பினார்கள் என்பது தெளிவு!
மேட்டூர் அணை கட்டி முடித்த பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பும் போது, அங்கு இந்த அளவு பொது சுகாதாரம், தண்ணீர் வசதி போன்றவை இருக்காது என்பதை உணர்ந்து வருந்தினார்கள் என்று ஆவணத்தின் ஓரிடத்தில் பதிவிடுகிறார் மேற்பார்வைப் பொறியாளர் "பார்பர்". இங்கிருந்து சென்ற ஒவ்வொரு நபரும் தங்கள் கிராமங்களில் இது போன்ற சுத்தமான சூழ்நிலையில் வசிக்க வேண்டிய அவசியத்தைத் தங்கள் கிராமத்தில் உள்ள சகோதரர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வாழ முயற்சி எடுத்திருப்பார்கள் என்பது உறுதி என்ற நம்பிக்கையையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
இதன்பின் தென்னிந்தியாவில் இது போன்ற எந்தவொரு பெரிய திட்டத்தைத் துவக்கினாலும் மேட்டூரில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அங்கு சென்று வேலை செய்ய மிகவும் விரும்புவார்கள். இதே போன்றதொரு சூழ்நிலைகள் கிடைக்கும் பட்சத்தில் உடல் நலத்தோடும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் நிலைபெற்றிருக்கும் என்றும் பதிவு செய்திருக்கிறார் செயற்பொறியாளர் C. G. பார்பர். இது சந்தேகமே இல்லாமல் அனைத்துவித நிறுவனங்களும் இன்றும் மனதில் நிறுத்த வேண்டிய முக்கிய செய்தியாகும்.
மேட்டூர் நகரியக் குழு
நிலக் கையகப்படுத்தும் வேலை வசதிகளுக்காகவும், மேலும் நிர்வாக வசதிகளுக்காகவும் மேட்டூரில் உள்ள இடங்கள் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டன. இதில் திட்டப் பணிகளுக்குத் தேவையான நிலங்கள் இதற்கென நியமிக்கப்பட்ட "கமிஷனர்" மூலமாக விரைவாகச் செயல்படுத்தப்பட்டன. இறுதியில் நில ஆர்ஜிதம் முடிவுக்கு வந்தபோது, இந்த மாவட்டம் சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகா என்றளவில் "மேட்டூர் தாலுகா" எனவும், பின்னர் "டெப்டி தாசில்தார்" அளவுக்கு அந்தப் பகுதியின் நிலை மாற்றப்பட்டது.

அணையில் நீர் முழு அளவில் தேங்கி நிற்கும்போது நீர்மட்டம் எங்கெல்லாம் பரவி நிற்கும் என்பதை அளந்து, அந்த நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருந்த மேட்டூர் கிராமம், இந்த மாற்றங்களுக்குப் பிறகு "மேட்டூர் தாலுகா" என்று வரையறுக்கப்பட்டுச் சேலம் மாவட்டத்திற்குள் ஒரு தாலுகாவாக இணைக்கப்பட்டது. இது காவல்துறை மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு வசதியாக இருக்கும் என்ற காரணங்களால் இம்மாதிரியான மாற்றம் செய்யப்பட்டது.
உள்ளூர் நிர்வாகம்:
இத்திட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து மேட்டூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்த அரசு சார்ந்த குடியிருப்புகளின் கட்டட வேலை மற்றும் நிர்வாக வேலைகளை உள்ளூர் அமைப்பான "மேட்டூர் குழு" ஒன்று நிர்வாகித்து வந்தது (Mettur Township Committee). இதில் வருவாய், உடல்நல ஆரோக்கியம் போன்ற பிரிவுகள் பொதுப்பணித்துறை அங்கங்களாகச் செயல்பட்டு வந்தன. மேட்டூர் அணை திட்ட 'செயற்பொறியாளர்' ஒருவர் (குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் பிரிவு) அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். அதில் பல உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். கமிஷனர், இன்ஜினியர் இன் சீஃப், மற்றும் தலைமைப் பொறியாளர் (ஒர்க்ஸ்) மூவரும் வரிசைக்கிரமமாக, அந்தக் கமிட்டியின் சேர்மன் பதவியை வகித்தனர்.
உள்ளூர் மருத்துவம் மற்றும் உடல்நலம் என்ற பிரிவுகள் நேரடியாக நிர்வாகப் பிரிவின் கீழ் செயல்பட்டன. தொழில்நுட்பச் செயல்பாடுகள் மாவட்ட மருத்துவ அதிகாரி (கோவை) (District Medical Officer) அவர்களாலும், பொது சுகாதார இயக்குநர், மெட்ராஸ் அவர்களின் மூலமும் செயல்பட்டன.
இந்த மாதிரியான உள்ளூர் நிர்வாகம் மிகவும் மெச்சத்தகுந்த வகையில் செயல்பட்டது. அணை கட்டும் பணி முழுவதும் முடிந்த பிறகு இந்தக் கமிட்டி கலைக்கப்பட்டு, பின்னர் மேட்டூரில் நீர்மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அங்கு நிறைய தொழிற்சாலைகள் வர ஆரம்பித்தவுடன் மீண்டும் "மேட்டூர் நகரியக் குழு" என்ற பெயரில் உள்ளூர் நிர்வாகம் செயல்பட ஆரம்பித்தது!
கொத்து வேலை மற்றும் கான்கிரீட் - விலை விகிதங்கள்
அணை கட்டப்படும்போது அதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு போன்ற அனைத்து விவரங்களும் மிகவும் கவனமாகக் குறித்து வைக்கப்பட்டுத் தரவுகள் பாதுகாக்கப்பட்டன. இதனால், இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அளவுகள், மொத்தக் கூலி மற்றும் மொத்தச் செலவுகளைத் துல்லியமாகப் பெற முடிந்தது.
மொத்தமாக 5,46,20,100 கன அடி கட்டட வேலையும் (சுமார் ஐந்தரை கோடி கன அடி), கான்கிரீட்டும் அதற்கான செலவு ரூபாய் 1,95,11,834/- எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த கான்கிரீட் வேலைகள் கட்டப்பட்ட விவரங்களைக் கீழே காண்போம்:
சிமெண்ட் - 2,05,959 டன்கள், Rs.52-6-4/டன் என்ற விலையில், ரூ.1,07,91,564/- செலவானது.
சுர்க்கி - 48,329 டன்கள், Rs. 5-4-0/டன் என்ற விலையில் ரூ.2,53,720/- செலவானது.
மணல் - 2,75,55,122 கன அடி ரூ.76,190/-, கற்கள் மற்றும் ஜல்லிகள் ரூ.31,83,734/-, போக்குவரத்துச் செலவு - ரூ.11,71,214/-, ஆட்கூலி - ரூ.33,35,412/- என்ற அளவிலும் மொத்தம் ரூ.1,95,11,834/- கட்டட வேலைக்கு மட்டும் செலவானது.
ஒட்டுமொத்த கான்கிரீட் வேலைகள் இயந்திரங்கள் மூலம் கட்டப்பட்டது குறித்த விவரங்கள் கீழே!
கான்கிரீட் - சிகப்பு கோபுரம் மூலமாக ஆன செலவு: ரூ. 19.8 லட்சம்
கறுப்பு கோபுரம் மூலமாக ஆன செலவு: ரூ. 9.3 லட்சம்
மற்ற இயந்திரங்கள் மூலமாக ஆன செலவு: ரூ. 12.5 லட்சம்
மொத்த கான்கிரீட் செலவு: ரூ. 41.6 லட்சம்
ஒட்டுமொத்தக் கட்டிட வேலை (Masonry) சிகப்பு கோபுரம், கறுப்பு கோபுரம், இதர இயந்திரங்கள் மூலமாக ஆன செலவு மதிப்பு: ரூ. 153.5 லட்சம்.
ஆக மொத்தம் கான்கிரீட் + கட்டிட வேலைகளுக்கு மட்டும் ரூபாய் 195.1 லட்சம் செலவானது.
மேலும், தரவுகளில் இருந்து 82.35 விழுக்காடு ஒட்டுமொத்தப் பரப்பு, கட்டிட வேலை மூலமே கட்டப்பட்டது மற்றும் மொத்த பரப்பில் 17.65 விழுக்காடு கான்கிரீட் மூலம் கட்டப்பட்டது என்பது தெரியவருகிறது.
இந்த அளவு குறைந்த செலவில் திறமையாகக் கட்டப்பட்ட இந்த மேட்டூர் அணைதான் 100 வருடங்களாக ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது என்று எண்ணிப் பார்க்கும்போது, எவர் ஒருவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கவல்ல அதிசயம் இது என்பதை உணரலாம்.
எதிர்பார்ப்புக்கு மாறாக, தேவைக்கு அதிகமாக ஆட்கள் கிடைத்ததாலும், சிறிய கலவை இயந்திரங்களை நிறைய எண்ணிக்கையில் பயன்படுத்தி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் கட்டட வேலைகளைச் செய்ததாலும், கான்கிரீட் மெஷினோடு ஒப்பிடுகையில் சுமார் 40-லிருந்து 48 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கான கட்டுமானக் காலம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததால், அதற்குரிய சேமிப்புத் தொகையைக் கணக்கிட்டால் மொத்த சேமிப்பு இன்னமும் அதிகமாக இருக்கும்.

இந்தத் தரவுகளை வைத்து ஆராயும்போது தென்னிந்தியாவில் எந்தவிதமான கட்டுமான முறை பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்துத் தெளிவு பிறக்கிறது. அந்த காலகட்டத்தில் வேறு நாடுகளில் பயன்படுத்தும் முறை இந்தியாவுக்குப் பொருந்தாது. ஏனெனில், இங்கு தேவையான ஆட்கள் குறைந்த கூலியில் கிடைத்ததால் விரைவான கட்டுமானத்திற்கு வழி ஏற்பட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் இயந்திர முறைகள் வேறாக இருக்கின்றன; அவை இங்கு பொருந்தா!
மேலும் நம் சுண்ணாம்புக்கு மாற்றாகச் சிமெண்ட் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி இங்கு நிரூபணம் ஆயிற்று. இவ்வாறு கண்காணிப்புப் பொறியாளர் பார்பர் தனது கருத்தைப் பதிந்து வைத்துள்ளார்.
தணிக்கை முறைகளின் விவரம்
மிகப்பெரிய திட்டமான மேட்டூர் அணைத் திட்டம் போல, எந்தவொரு திட்டத்திற்கும் வரவு செலவுகள் குறித்த கணக்குகளைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். மேலும் அதற்குச் சரியான அமைப்பை ஏற்படுத்துவது மிகுந்த கடினமான பணி. தொடர்ந்து பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வேலையாட்களுக்குச் சரியான நேரத்தில் கூலி தருவது, ஒப்பந்ததாரர்களுக்கு அவர்களுக்கு உண்டான பில் தொகையைத் தீர்ப்பது போன்ற அம்சங்கள் மிகவும் முக்கியம்.
பொதுப்பணித் துறையில் காலதாமதம் ஏற்படாமல் அவ்வப்போது நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இந்தத் திட்டத்தில் அவசியம் ஏற்பட்டது. எனவே, இங்கு "முன் தணிக்கை" அமைப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டு, மேட்டூருக்குத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தேவையான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக டெல்லியில் ஏற்கனவே நன்கு அனுபவம் பெற்ற திரு. ஹாரிஸ் (B.A. Harris) என்ற தணிக்கை அலுவலக அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக "பின் தணிக்கை முறைக்கு" (Post Audit system) பதிலாக "முன் தணிக்கை முறை" (Pre Audit system) மேட்டூர் அணை கட்டுமானத்தின் ஆரம்ப காலங்களில் செயல்படுத்தப்பட்டது. இது மிகச் சிறந்த ஏற்பாடாகவும் அமைந்தது. இந்த முறையில் வேலை எளிதானது! இதனால் பொறியாளர்கள் மேஜை மீது செலவிடும் நேரத்தைக் குறைத்து, கட்டுமானப் பணிகளில் அதிக கவனத்தைச் செலுத்த முடிந்தது. இதனால் பொறியாளர் - ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே நல்ல புரிதலும் ஒத்துழைப்பும் ஏற்பட்டு வேலைகள் விரைவாக நடந்தன.
இந்த முறை குறித்து தலைமைக் கணக்காளர் (Accountant General) தனது கருத்துக்களைப் பதிவு செய்த விவரங்கள் கீழே:
மேட்டூரில் தணிக்கை அலுவலகம் (Audit office) அமைக்கப்பட்டதால் "முன் தணிக்கை முறை" சிறப்பாகச் செயல்பட உதவியது.
ஒவ்வொரு மாதமும் தயார் செய்ய வேண்டிய நீண்ட அறிக்கைகள் குறைந்தன. நேரம் மீதமானது!
தணிக்கை அலுவலகத்தை உடனுக்குடன் தொடர்பு கொண்டு பல்வேறு பிரிவுகளின் அலுவலக அதிகாரிகள் தங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு உண்டான விளக்கங்களைப் பெற்றனர். முன் தணிக்கை முறை பெரும் உதவி புரியும் அமைப்பாக மாறியது.
பின் தணிக்கை முறையில் அனைத்து "பில்களும்" சரிபார்க்கப்பட்டன.
பின் தணிக்கை முறையால் சில "மாதிரி" (Sample) அளவில் மட்டுமே எடுத்துச் சரிபார்க்க இயலும். ஆனால், முன் தணிக்கை முறையில் 100 விழுக்காடு பில்களும் சரிபார்க்கப்பட்டன.
பின் தணிக்கை முறையில் பெரும் காலதாமதம் ஏற்பட்டிருந்த நிலை மாறி, முன் தணிக்கை முறையில் அனைத்துத் தகவல்கள், செயல்பாடுகள் "செயற்பொறியாளர்" வரையிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
டிவிஷனல் மற்றும் சப்-டிவிஷனல் அலுவலகங்களின் பணிச்சுமை வெகுவாகக் குறைந்தது.

தனியான தணிக்கை அலுவலகம் 1927-ம் வருடம் டிசம்பர் 1-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது! முன் தணிக்கை முறை (Pre Audit system) 1928-ம் வருடம் ஜனவரி 4-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டது. முன் தணிக்கை செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்கள் சென்னையிலுள்ள தலைமைக் கணக்காளர் அவர்களின் மூலம் அச்சிடப்பட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மெட்ராஸ் மாகாணத்தில் முதன்முறையாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குப் பின்னர் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த "முன் தணிக்கை முறை" செயல்படுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்! மேட்டூர் அணை திட்டத்தில் அணை கட்டுமானப் பிரிவில் ஆட்கள் சம்பளம், ஒப்பந்ததாரர்களின் பில் என மாதம் ஒன்றுக்கு ரூபாய் 40,000-லிருந்து 50,000 வரை செலவு செய்ய வேண்டியிருந்தது.
இதனால் தணிக்கை அலுவலர்களுக்கு பெருமளவிலான வேலைப்பளு இருந்தாலும், "முன் தணிக்கை முறை" என்ற இந்த முறையின் மூலம் செலவைக் குறைத்து, இந்த மேட்டூர் அணை கட்டுமானத்திற்குத் தணிக்கை அதிகாரிகள் தங்களது பெரும் பங்களிப்பை நல்கினர் என்று உறுதிபடக் கூறலாம்!
தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு
"பூவிரி கதுப்பின் மடமங்கையர் அகந்தொறும் நடந்து பலிதேர்பாவிரி இசைக்குரிய பாடல் பயிலும் பரமர் பழமையெனலாம்காவிரி நுரைத்து இருகரைக்கும் மணிசிந்த வரி வண்டு கவரமாவிரி மதுக்கிழிய மந்தி குதி கொள்ளும் மயிலாடுதுறையவரைவந்த சந்தொடு அகிலுந்தி வந்த மிளிர்கின்ற பொன்னிவடபால்திரைவந்து வந்து செறிதேறலாடு திருமுல்லை வாயிலிதுவே."— தேவாரப் பாடல் – திருஞான சம்பந்தர்
பொருள்: இப்பாடல்கள் முறையே மயிலாடுதுறை, திருமுல்லைவாயில் ஆகிய கடைமடைப் பகுதியில் அமைந்த தலங்களுக்குரியன. காவிரியின் நீர்ப்பெருக்கு அதன் கடைமடை வரை பயன்பட்ட வரலாற்றை இவ்விலக்கிய பகுதிகள் காட்டுகின்றன.



















