என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் ...
பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்... வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09
தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தியல், கொள்கைகள், பிரசாரம், தலைவர்களின் பேச்சுகள் மட்டுமல்ல; அதோடு சேர்ந்து பரிசுப் பொருட்கள், கறி விருந்து, பணப் பரிமாற்றம் போன்ற விஷயங்களும் தேர்தலின் ஒரு அங்கமாக நீண்ட காலமாக இணைந்து பயணித்து வந்துள்ளன.
தேர்தல் அரசியலின் ஆரம்ப காலங்களில் சில நேரங்களில் நடந்த இதுபோன்ற சிறப்பு'கவனிப்புகள்', காலப்போக்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறையாகவே மாறின.
இப்படி வாக்காளர்களுக்கான பரிசுகள் மற்றும் பணம் வழங்கும் பழக்கத்தை, திடீரெனத் தோன்றிய ஜனநாயகச் சிதைவாகப் பார்க்க முடியாது. அதைச் சமூக கட்டமைப்புகள், அரசியல் போட்டிகள், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் மெதுவாக உருவான ஒரு நிகழ்வாகவே பார்க்க வேண்டும். கால ஓட்டத்தில் இந்தப் பரிசுப் பொருட்களின் தன்மை மாறினாலும், தேர்தல் அரசியலின் ஒரு பகுதியாக அது இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகான ஆரம்ப ஆண்டுகளில், தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரஸ் கட்சிதான் ஆதிக்கம் செலுத்தியது. அந்தக் காலத்தில், அந்தக் கட்சியின் பொறுப்புகளில் பெரும்பாலும் பெரிய நிலச்சுவான்தாரர்கள், பண்ணையாளர்கள், உள்ளூர் செல்வாக்காளர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். தேர்தல்கள் என்பது பெரிதாக மக்களைக் கவரும் போட்டியாக இல்லாமல், யாருக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.
இதனால், இந்தப் பண்ணையார்கள் பெரும்பாலும் ஓட்டுக் கேட்டு மக்களிடம் செல்ல மாட்டார்கள். ஊர் நாட்டமைகளை வீட்டுக்கு வரவரழைத்து, தேர்தல் நாளைச் சொல்லி, ஜனங்களை அன்னிக்கு அழைச்சுட்டு போய் பொட்டியிலே வாக்குச் சீட்டைப் போடச் சொல்லுய்யா" எனச் சொல்லி அனுப்புவார்கள்.
அப்படி ஓட்டுப்போடுபவர்களுக்கு வேட்டி, சேலையோ, நெல் அல்லது தானியங்களோ, வெத்திலை பாக்கோ, காபி டீயோ, பணமோ கொடுத்து அனுப்புவார்கள். இல்லையெனில் சாப்பாடு போட்டு அனுப்புவதும் உண்டு எனத் தொடக்க கால தேர்தல்கள் குறித்த குறிப்புகளும் வாய்மொழி நினைவுகளும் குறிப்பிடுகின்றன. சில தொகுதிகளில் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இந்த பண்ணையாளர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அப்படியான சமயங்களில் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பதாகவோ அல்லது ஊர் மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க குளம் அல்லது கிணறு வெட்டித்தருவதாக வாக்குறுதி கொடுத்து, வெற்றி பெற்றவர்களும் உண்டு,
இவையெல்லாம், இன்று நாம் நினைப்பதுபோல் நேரடியான லஞ்சமாக பார்க்கப்படவில்லை. சமூக உறவு, அதிகாரம், ஆதரவு ஆகியவற்றின் ஒரு பகுதியாகவே அது கருதப்பட்டது. வாக்காளர், தனிநபர் உரிமையுடன் கூடிய அரசியல் முடிவெடுப்பவராக அல்லாமல், சமூக அடுக்கின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டார். இந்தக் கலாசாரத்தின் சுவடுகளை, அந்தக் கால கருப்பு-வெள்ளை தமிழ்த் திரைப்படங்களிலும் காணலாம்.சமூகம் ஏற்கனவே அறிந்திருந்த ஒரு நடைமுறையை, சினிமா தன் மொழியில் பதிவு செய்திருந்தது.
1960-களுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் முக்கியமான மாற்றத்தைச் சந்தித்தது. திமுகவும் பின்னர் அதிமுகவும் அரசியல் களத்தில் வலுவாக நுழைந்தன. தேர்தல்கள் நிலப்பிரபுக்களின் தனிப்பட்ட செல்வாக்கிலிருந்து, நேரடி மக்கள் அரசியலாக மாறத் தொடங்கின. பெரிய பொதுக்கூட்டங்கள், தீவிர பிரசாரம், சினிமா, பாடல்கள், உணர்ச்சி அரசியல் ஆகியவை வாக்காளர்களை நேரடியாக அணுகும் கருவிகளாக மாறின.
இந்த மாற்றத்துடன், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் உதவிகளின் வடிவமும் மாறியது. காங்கிரஸ் காலத்தில் இருந்த தனிநபர் ஆதரவு முறைக்கு பதிலாக, இப்போது கட்சிகள் ஒருங்கிணைந்த முறையில் வாக்காளர்களை “கவனிக்கும்” நிலை உருவானது. பணம், லட்டுக்குள் மூக்குத்தி, கொலுசு, உணவுப் பொருட்கள், துணிகள், மது போன்றவை வழங்கப்பட்டன. கட்சிகள் இடையிலான கடும் போட்டியின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் அமைந்தன.

தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் பணப் பயன்பாடு அதிகமாக வெளிப்பட்டதற்கு முக்கிய காரணம் இடைத்தேர்தல்கள்தான். பொதுத் தேர்தல்களைப் போல அல்லாமல், இடைத்தேர்தல்கள் ஒரு தொகுதிக்குள் மட்டுமே நடைபெறும். இதனால், கட்சிகளின் கவனமும் வளங்களும் அந்த ஒரு தொகுதியிலேயே குவியும். இடைத்தேர்தலில் வெற்றி என்பது ஆளும் கட்சியின் கெளரவ பிரச்னை என்பதால், ஒட்டுமொத்த அமைச்சர்களும் அந்தத் தொகுதியில் முகாமிடுவார்கள்.
அதே சமயம், எதிர்க்கட்சிக்கு தனது அரசியல் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாகவும் கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாகவும் இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இதனால், “எப்படியாவது இந்தத் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும்” என்ற மனநிலை இருதரப்பிலுமே காணப்படும்.
எனவேதான், இந்தப் போட்டியில், பணம் ஒரு முக்கிய ஆயுதமாக மாறியது. ஒரு தொகுதிக்குள் மட்டுமே பணம் செலவிட வேண்டிய நிலை இருப்பதால், கட்சிகளும் தாராளமாகச் செலவிடத் தொடங்கின. இதுவே, பண அரசியலை தீவிரமாக்கிய முக்கிய காரணமாக அமைந்தது.
இவ்வாறு பணப் பயன்பாடு வெளிப்படையாக மாறத் தொடங்கியதால், இந்தியத் தேர்தல் ஆணையமும் மெல்ல மெல்ல தனது கண்காணிப்பைக் கடுமையாக்கியது. பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பதிவு, வாக்குச்சாவடி பார்வையாளர்கள் என பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் பல தேர்தல்களில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் செய்தியாகியுள்ளன. சில இடங்களில், அதிகாரிகள் மீது தாக்குதல் நடந்ததாகவும், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. 2011 சட்டமன்றத் தேர்தலில், மதுரை மேலூர் தொகுதியில் நடந்த சம்பவம் இதற்கான முக்கிய எடுத்துக்காட்டகச் சொல்லலாம். அந்தத் தேர்தலில் மேலூரில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக புகார் எழுந்தபோது, தேர்தல் அதிகாரிகள் வீடியோ எடுத்ததை, அப்போது மதுரை திமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மு.க. அழகிரி தரப்பினர் எதிர்த்ததால், தாசில்தார் மீது தாக்குதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு குறைவில்லை.
அதே சமயம், இந்த வகை புகார்கள் அதிகரித்த சில தொகுதிகளில், தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. இதனால், பண அரசியல் என்பது சட்ட சிக்கல்களையும் நிர்வாக நெருக்கடிகளையும் உருவாக்கும் பிரச்னையாக மாறியது.

நீண்ட காலமாக பணம் கொடுத்து வாக்கு வாங்கும் பழக்கம் தொடர்ந்ததால், அதன் மிக முக்கியமான விளைவு வாக்காளர் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான். ஒரு கட்டத்திற்கு பிறகு, சில பகுதிகளில் வாக்காளர்கள் பணத்தை “பரிசு” அல்லது “லஞ்சம்” என அல்லாமல், “தேர்தல் நேரத்தில் கிடைக்க வேண்டிய உரிமை” என்பதுபோல பார்க்கத் தொடங்கினர்.
“எங்கள் வீட்டில் இத்தனை ஓட்டுகள் இருக்கின்றன” என்று கூறி, கட்சிகளிடம் பேரம் பேசும் நிலை உருவானது. யார் அதிகம் தருகிறார்களோ, அவர்களுக்கே வாக்கு என்ற அணுகுமுறை சில இடங்களில் வெளிப்படையாகப் பேசப்பட்டது.
இவை தவிர, தங்களுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டவர்களுக்கு கட்சியினர் கறி விருந்து போட்ட வரலாறும் உண்டு. மேலும், ஓட்டுப்போட வருபவர்களை வாகனங்களில் அழைத்து வருவது, டீ, காபி வாங்கிக்கொடுத்து உபசரிப்பது போன்ற நிகழ்வுகளெல்லாம் அரங்கேறின. மேலும், வேலை நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூர் போன்ற வெளியூர்களில் இருக்கும் வாக்காளர்களுக்கு பேருந்து கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ஓட்டுக்கு இவ்வளவு எனப் பணம் தருவதாக கூறி, அவர்களைச் சொந்த ஊர்களுக்கு வரவழைத்து, ஓட்டுப்போடச் செய்த நிகழ்வுகளும் உண்டு.
"இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தையே கேள்விக்குள்ளாக்கும் பரிதாபகரமான நிலை. தங்களின் வாக்கு எத்தகைய சக்தி மிக்கது என்பதை அறியாமலேயே மக்கள் இப்படி தங்களது வாக்குகளை விற்கிறார்களே...?!" என ஆதங்கப்படுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
இதன் இன்னொரு விளைவு, நேர்மையாக தேர்தலைச் சந்திக்க விரும்பும் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு. பணம் கொடுக்க முடியாதவர்கள் போட்டியில் பின்தள்ளப்பட்டனர். இதனால், தேர்தல் அரசியல் மெதுவாக “சேவை அல்லது கொள்கை” அடிப்படையிலிருந்து, “செலவழிக்கும் திறன்” என்ற அடிப்படையை நோக்கி நகர்ந்து விட்டது.
பல தசாப்தங்களாக நீடித்துவரும் பணம்–பரிசு அரசியலின் மிகப் பெரிய விளைவு, அது மெதுவாக இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்பதே. வாக்காளர்களின் பண எதிர்பார்ப்பு நிலையும், கட்சிகள் அதற்கென தனி பட்ஜெட் ஒதுக்கும் நிலையும் ஜனநாயகத்தின் நெறிமுறையை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஒருகாலத்தில் மறைத்து மறைத்து வழங்கப்பட்ட தேர்தல் பரிசுகள், இன்று பரிவர்த்தனை என்ற நிலைக்கு மாறிவிட்டன. டோக்கன் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலையும் அல்லது குறிப்பிட்ட மளிகைக் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொள்ளும் நிலையும் உருவாகிவிட்டன. குடிமகனின் கடமையாகக் கருதப்பட்ட வாக்குப்பதிவு, சிலரால் உடனடி லாபம் கிடைக்கும் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் இன்னும் பல நேரங்களில் எதிர்பாராதவிதமாகவே அமைகின்றன. பணம் இருந்தால் வெற்றி உறுதி என்பதில்லை. ஆட்சி மாற்றங்கள் நடைபெறுகின்றன.பலரும் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்கு மனதிற்குப் பிடித்த கட்சிகளுக்கே வாக்களித்து விடுகிறார்கள். பதவியில் இருப்பவர்கள் தோற்கிறார்கள், வாக்காளர்களின் நடத்தை இன்னும் கணிக்க முடியாததாகவே தொடர்கிறது.
அதே நேரத்தில், “நேர்மையான தேர்தல் சாத்தியமா?” என்ற எதிர்பார்ப்பும் முழுமையாக மறைந்துவிடவில்லை. பணம் கொடுத்து வாங்கப்படும் ஓட்டுகள் மூலம் ஒரு தேர்தலில் வெல்லலாம். ஆனால், அரசியலின் மீதான மக்களின் நம்பிக்கையை வெல்ல, பணத்தை விட பெரிய தேவை நம்பிக்கையும் நேர்மையும்தான்.
என்னதான் பணம், பரிசுகளை அள்ளி இறைத்தாலும், இன்னும் தமிழ்நாட்டு வாக்காளரின் சுயாதீனத்தை உறுதி செய்யும் இறுதியான இடமாகவே வாக்குச் சாவடி தொடர்கிறது.வெளியே பணத்தின் தாக்கமும், உள்ளே தேர்வின் சுதந்திரமும் என இந்த இரண்டுக்கும் இடையிலான அந்த இழுபறிதான், தமிழ்நாட்டின் ஜனநாயகக் கதையை இன்னும் முடிவடையாத ஒன்றாக வைத்திருக்கிறது.!
















