`கூட்டணி இருக்கா இல்லையா?’ - காத்திருக்கும் பாஜக; கூலாக வேட்பு மனுக்களை தாக்கல் ...
'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விசுவாசம்.!' - கொந்தளிக்கும் தவெக அருண் ராஜ்
தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரான அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. பிரசாரத்தின் போது மக்களுக்கு விநியோகிப்பதற்காக அருண் ராஜ் தரப்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் திமுகவுக்கு விசுவாசமாக செயல்படுவதாக அருண்ராஜ் காட்டமாக ஒரு பதிவை இட்டுள்ளார்.

அருண் ராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், 'பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள்.
நேற்றைய தினம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நடத்தி வரும் புகழ்பெற்ற பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான Raid நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு இடத்தில் கணக்கில் காட்டப்படாத பணமோ பொருட்களோ பதுக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால், பறக்கும் படையினர் வருமான வரித்துறையினருக்கு தகவல் அனுப்பி விட்டு, அந்த இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும்; அந்த இடத்திற்குள் நுழைந்து சோதனை செய்ய பறக்கும் படையினருக்கு அதிகாரம் இல்லை; முறையான வாரண்ட் உடன் வருமான வரித்துறையினர் தலைமையில் தான் சோதனை/ரெய்டு நடத்தப்பட வேண்டும்.

ஆனால் நேற்றைய தினம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பேரூராட்சியில் இயங்கி வரும் புகழ்பெற்ற AKV பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. M. வெற்றிவேல் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சட்டத்திற்கு புறம்பான சோதனை நடத்தியுள்ளனர்; சோதனைக்குப் பிறகு அங்கு எந்த ஒரு பணமோ பொருளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி சான்றிதழ் அளித்து சென்று இருக்கிறார்கள்.
இவ்வாறு சோதனை நடத்தவோ, சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கடிதம் கொடுக்கவோ தேர்தல் பறக்கும் படையினருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.
இதேபோல் 16-03-2026 அன்று திருச்செங்கோடு வரகுராம்பட்டியில், பட்டேல் நகர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டிற்குள் திரு.பரமராஜ் (Asst Agri Officer) அவர்கள் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அத்துமீறி உள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த Rs 23,000/- மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
முறையான ஆவணத்துடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டு, 15-03-2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அன்று நடக்கவிருந்த போட்டிகள் நடத்தப்படாமல் பரிசு பொருட்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க-வினர் தொடர்ந்து தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட அழுத்தம் கொடுப்பதும், சில அதிகாரிகள் அந்த அழுத்தத்திற்கு பணிந்து செயல்படுவதும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் சூழலை உருவாக்காது. மேற்கண்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேபோல் மூன்று வாரங்களுக்கு முன்பு ஈரோடு பள்ளிபாளையத்தில் இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி Dr கண்ணன் அவர்களின் ராதா Ortho மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கொடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகள், ஊட்டச்சத்து டானிக் மற்றும் Boost பாட்டில்களை, ஏதோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்டது போல சித்தரித்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.














